மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாடுகளுடன் வந்து மனு அளித்த இந்து மக்கள் கட்சியினர்! | Hindu Makkal Katchi comes to Cuddalore collector office with cow to give petition

வெளியிடப்பட்ட நேரம்: 21:01 (18/12/2017)

கடைசி தொடர்பு:21:01 (18/12/2017)

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாடுகளுடன் வந்து மனு அளித்த இந்து மக்கள் கட்சியினர்!

கோயில் மாடுகள் திருடுபோவதைத் தடுக்கக் கோரி, இந்து மக்கள் கட்சியினர் மாடுகள் மூலம் கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் காமதேவன், "கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் பெளர்ணமி அன்று மாடவீதி வரும் பொதுமக்களும் பக்தர்களும் கோயிலைச் சுற்றி மாடவீதி வரும் சமயத்தில் பலர் மயங்கி விழுந்துவிடுகின்றனர். எனவே, அந்தப் பகுதியில் பக்தர்களுக்குச் சிகிச்சையளிக்கும் பொருட்டு தற்காலிக மருத்துவக் குழு அமைக்கப்பட வேண்டும். இக்கோயிலுக்குச் சொந்தமான விளைநிலங்கள், கடைகள், பயிர் செய்யப்படாத வெற்றிடங்கள், கோயில் தெய்வச் சிலைகளுக்கு அணிவிக்கப்படும் நகைகள் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும். கோயில் உண்டியலில் பக்தர்கள், பொதுமக்கள் செலுத்தும் நகைகள் உள்ளிட்ட காணிக்கைகள், பொதுமக்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் திறந்து எண்ணப்பட வேண்டும்.

அத்தோடு, கோயிலில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர் கோயிலின் புனிதத்தைக் கெடுக்கும் வகையில் மது அருந்துதல் மற்றும் அசைவ உணவு உண்ணுதல் மற்றும் சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்படி, கோயிலில் கோசாலை உள்ளது. இந்தக் கோசாலையில் வேண்டிக்கொண்ட பக்தர்கள் வேண்டுதலின் பேரில், பசுமாடுகளைக் கோசாலையில் ஒப்படைத்து வருகிறார்கள். அந்தப் பசுமாடுகளில் பல மாயமாகியுள்ளன. அந்தப் பசுமாடுகளைக் கோயில் ஊழியர்கள் திருடி விற்றுவிட்டதாகச் சொல்கிறார்கள். இக்கோயிலில் நாள் ஒன்றுக்கு 50 பேருக்கு அன்னதானம் வழங்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால், சொற்ப நபர்களுக்கே அன்னதானம் வழங்கப்படுகிறது. அரசு, இதற்கு உடனடியாக நிரந்தர தீர்வுகான வேண்டும்’’ என்றார்.