வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (18/12/2017)

கடைசி தொடர்பு:21:30 (18/12/2017)

பிரதமர் மோடி வருகை! கன்னியாகுமரிக்கு விரையும் ஆளுநர், முதலமைச்சர்

பிரதமர் மோடி கன்னியாகுமரிக்கு நாளை வருவதைஒட்டி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் குமரி வர உள்ளனர். 

ஒகி புயல் கடந்த நவம்பர் மாதம் 30-ம் தேதி கன்னியாகுமரி மற்றும் கேரள மாநிலப் பகுதிகளைத் தாக்கியது. அப்போது கடலில் இருந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் கரை திரும்ப முடியாமல் தவித்தனர். அவர்களில் பலர் உயிரிழந்தனர். விவசாய நிலங்களும் மரங்களுங்களும் நாசமாகின.

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்துக்கு அரசியல் தலைவர்கள் வந்து, நேரில் பார்வையிட்டனர். எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தைத் தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் குமரி வந்து மீனவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதேபோல், கன்னியாகுமரி மாவட்டத்துக்குக் கடந்த 14-ல் வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாதிக்கப்பட்ட மீனவர்களைத் தூத்தூர் பகுதியில் நேரில் சந்தித்தார்.

இந்தநிலையில், பிரதமர் மோடி நாளை கன்னியாகுமரி மாவட்டத்துக்கு மதியம் 2.45 மணிக்கு வருகிறார். புயல் பாதிப்புகள் குறித்து அதிகாரிகளுடன் அவர் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார். இந்தநிலையில், பிரதமர் மோடி வருவதால் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் மீண்டும் நாளை காலையில் கன்னியாகுமரி வர இருக்கிறார்கள்.

அவர்களுடன் விருந்தினர் மாளிகையில் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். அதில் அதிகாரிகளும் கலந்துகொண்டு புயல் நிவாரணப் பணிகள் குறித்து விவாதிக்க இருக்கிறார்கள். அதன்பின்பு விருந்தினர் மாளிகை கருத்தரங்கு ஹாலில் ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களையும் விவசாயிகளையும் பிரதமர் மோடி சந்தித்துப் பேசுகிறார். இந்தச் சந்திப்பு முடிந்ததும் மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து விமானம் மூலம் பிரதமர் மோடி டெல்லி செல்கிறார். பிரதமர் மோடி கன்னியாகுமரிக்கு வருவதால் 3 அடுக்கு பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது .

நீங்க எப்படி பீல் பண்றீங்க