’ஓபிஎஸ். தம்பி ராஜாவுக்கு எதிரான வழக்கிலும் தீர்ப்பு நியாயமாக கிடைக்கும்’ - எவிடென்ஸ் கதிர் நம்பிக்கை

துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ். தம்பி ராஜா வழக்கிலும் தீர்ப்பு நியாயமாக கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக சமூக செயற்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் தம்பி வழக்கும்

ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிரான வன்முறை, காதலர்கள் மீதான ஆணவக்கொலைகள், மனித உரிமை மீறல்களுக்கு எதிராக தொடர்ந்து பணியாற்றி வருபவர் ’எவிடென்ஸ்’ கதிர். பாதிக்கப்படுபவர்களுக்கு சட்டரீதியான உதவிகளை இவர் செய்து வருகிறார். சமீபத்தில் பரபரப்பாக தீர்ப்பு வழங்கப்பட்ட உடுமலை சங்கர் கொலை வழக்கை, நடத்துவதிலும் இவர் பங்களிப்பு இருந்தது.

இந்தநிலையில், பெரியகுளம் கைலாசபுரம் கோயில் பூசாரி நாகமுத்துவைத் தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் குற்றவாளியாக உள்ள துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ். தம்பி, ராஜா மீதான வழக்கு பற்றி கருத்து தெரிவித்துள்ள கதிர், "கவுசல்யா வழக்கு தீர்ப்பு திருப்தி அளிக்கிறது. அடுத்து ஒ.பி.எஸ். தம்பி ராஜாவுக்கு எதிரான தீர்ப்பும் நியாயமாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். ’இப்படியே வழக்கு நடத்தி எங்களை அழிக்க பார்க்கிறாயா...' என்று சாதிய கும்பல்கள் எங்களை மிரட்டுகின்றன. என்ன செய்ய...., சாதிய வன்மத்திற்கு எதிராக எவிடென்ஸ் அமைப்பு தற்போது சராசரியாக 450 வழக்குகள் நீதிமன்றத்தில் நடத்தி வருகிறது. எவிடென்ஸ் கதிரைக் கொல்ல வேண்டும், குடும்பத்தை அழிக்க வேண்டும் என்கிற வழக்கமான மிரட்டல் தொடர்கிறது. துணிவும் அன்பும் நீதியும் எனக்கு சேரி கற்று கொடுத்து இருக்கிறது. மனித உரிமைக் களத்தில் எதுவும் நடக்கலாம் என்கிற உண்மையை உணர்ந்தே இருக்கிறேன். உங்களது சாதி மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன். எதையும் எதிர்கொள்ளுவேன், அவர்கள் திருந்துவதைத் தவிர வேறு வழி இல்லை'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!