வெளியிடப்பட்ட நேரம்: 01:13 (19/12/2017)

கடைசி தொடர்பு:01:13 (19/12/2017)

கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டத்துக்கு தடைக்கோரி மனு..!

கன்னியாகுமரி பள்ளிவிளைப் பகுதியைச் சேர்ந்த டார்வின் கான்ஸ்டண்ட் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் "குமரி மாவட்டத்தில் அருமணையில் இருந்து கேரளா செல்லும் சாலையில் அருமணை, கடையாலுமூடு, களியல், பத்துகானி, ஆறுகானி மற்றும் கேரளாவில் நெடுஞ்சாலை ஓரத்தில் கூட்டங்கள் நடத்த அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

தற்போது மத அமைப்புகள் சாலையின் குறுக்கே மேடை அமைத்து கிறிஸ்துமஸ், பொங்கல் விழாக்களை நடத்தி வருகின்றன. இவ்விழாக்கள் பல நாட்கள் நடத்தப்படுகின்றன. இந்த நாட்களில் உள்ளூர் மக்களும், பிற மக்களும் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி பிரதானச் சாலைக்கு செல்ல வேண்டியுள்ளது. பொதுமக்கள் தாங்கள் சென்றடைய வேண்டிய இடத்துக்கு சரியான நேரத்திற்குள் செல்ல முடியாத நிலையை ஏற்படுகிறது.

எனவே22, 23ஆம் தேதிகளில் அருமனை காவல் நிலையம் அருகே நடைபெற உள்ள கிறிஸ்மஸ் விழாவிற்கு தடை விதிக்க வேண்டும். அவ்விழாவிற்கு அனுமதி வழங்கக்கூடாது என குமரி மாவட்ட ஆட்சியர், எஸ்.பி, டி.எஸ்.பி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி சுந்தர் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டீபன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கடந்த 24 ஆண்டுகளாக அந்த இடத்திலேயே விழாவை நடத்தி வருவதாக தெரிவித்தார். இதையடுத்து இது குறித்து குமரி மாவட்ட ஆட்சியர், எஸ்.பி, டி.எஸ்.பி ஆகியோர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 20-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.