வெளியிடப்பட்ட நேரம்: 05:15 (19/12/2017)

கடைசி தொடர்பு:16:58 (23/07/2018)

28,000 மரக் கன்றுகள் நடத் திட்டம்..! கரூர் மாவட்ட ஆட்சியர்

கரூர் மாவட்டத்தில் 2017-2018 -ம் ஆண்டில் 28,000 மரக்கன்றுகள் நடவு செய்வதற்கு திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன என்று கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ் தெரிவித்தார்.


கரூர் மாவட்டம், தாந்தோணி ஊராட்சி ஒன்றியம் காக்காவாடி ஊராட்சி அம்மையப்ப கவுண்டன் புதூரில் பசுமைப் போர்வைத் திட்டத்தின்  கீழ் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரித்து வரும் பணியை மாவட்ட ஆட்சித் தலைவர் கோவிந்தராஜ் பார்வையிட்டார். இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய கோவிந்தராஜ், 'கரூர் மாவட்டத்தில் சுற்றுச்சூழலை மேம்படுத்தவும், காற்று மாசுவை தடுக்கவும், வெப்பத்தின் அளவைக் குறைக்கவும், தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்திவருகிறது.

அதன்படி, மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் 2017-2018-ம் ஆண்டுக்கு சாலையோரங்களில் 82 கி.மீ நீளத்துக்கு 1,500 மரக்கன்றுகள் நடுவதற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ்  278 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், பசுமை போர்வைத் திட்டத்தின்கீழ் பொது இடங்களில் மரக்கன்றுகள் நடும் திட்டம் 121 லட்ச ரூபாய் மதிப்பில் 1,300 மரக்கன்றுகளை நடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கரூர் மாவட்டம் முழுவதும் நடப்பாண்டில் 399 லட்ச ரூபாய் மதிப்பில் 28,000 மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன' என்று தெரிவித்தார்.