வெளியிடப்பட்ட நேரம்: 09:22 (19/12/2017)

கடைசி தொடர்பு:11:11 (19/12/2017)

“உங்கள் பொன்னான வாக்குகளை…” - தினகரனுக்கு ஓட்டு கேட்ட சுப்பிரமணியன் சுவாமி!

சுப்பிரமணியன் சுவாமி, subramanian swamy

து என்னவோ தெரியவில்லை… சுப்பிரமணியன் சுவாமியின் ட்வீட் அஸ்திரங்கள் பலவும் சொந்தக் கட்சியான பா.ஜ.க.,வையே பதம் பார்க்கின்றன. தான் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியை அங்கிருந்துகொண்டே சீண்டிப் பார்க்கும் கலையில் சுப்பிரமணியன் சுவாமிக்கு எப்போதும் ‘ஏ கிரேடு’தான். ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் பற்றி சுப்பிரமணியன் சுவாமியின் நேற்றைய ட்விட்டர் பதிவு தி.மு.க.,வைவிட, தமிழக பா.ஜ.க.,வையே அதிகம் உலுக்கியிருக்கும். “பா.ஜ.க செயற்பாட்டாளர்கள் சிலர் மூலம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தி.மு.க மற்றும் தினகரன் இடையிலான போட்டியாகக் குறுகிவிட்டதாக அறிகிறேன். வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்றால், தமிழர்கள் தினகரனுக்குத்தான் வாக்களிக்க வேண்டும்”, என திகில் கிளப்பியிருக்கிறார் சுப்பிரமணியன் சுவாமி. 

சுவாமியின் ட்விட்டர் அரசியல்:

சுப்பிரமணியன் சுவாமியின் ட்விட்டர் பக்கம் ஒரு மினி நாடாளுமன்றம் போன்றது. பலநேரங்களில் அது ‘நையாண்டி தர்பார்’ ஆனது வேறு கதை. ஆனால், இந்தியாவில் நடக்கும் அரசியல் சம்பவங்கள் முதல் ஆட்சி பீட ரகசியங்கள் வரை எதற்கும் ஒரு கருத்து, விமர்சன ட்வீட் என முன்னோட்டமிட்டு கேம் ஆடுவார் சுவாமி. பா.ஜ.க மீதான விமர்சனங்கள் மூலம் சொந்தக் கட்சிக்குள்ளேயே சலசலப்புகளை கிளப்பிவிடும் ஆற்றல் இவரது ட்வீட்டுகளுக்கு உண்டு. தமிழக அரசியலையும், அரசியல் தலைவர்களையும் இவர் தள்ளி வைத்து பார்ப்பதே இல்லை. தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு எதிராக எப்போதும் சீறி வரும் இவர், தி.மு.க தலைமை பொறுப்பு தொடர்பாக ஸ்டாலினுக்கு ஆதரவான ‘லல்லபி’ பாடியபோது ட்ரக்யோஸ்டோமி செய்து ஓய்வில் இருக்கும் கருணாநிதிக்கே திக்கென இருந்திருக்கும். ஜல்லிக்கட்டுப் போராட்டம், சசிகலா என்ட்ரி, சொத்துக் குவிப்பு வழக்கு, சிறை சென்ற சசிகலா, ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் ‘உள்ளே வெளியே’ விளையாட்டு, கமல்ஹாசன் லடாய் என சுப்பிரமணியன் சுவாமியின் ட்விட்டர் ஆட்டத்தில் தமிழகத்துக்கு எப்போதும் தனியிடம் உண்டு. 

இதோ, இப்போது ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல். சும்மாயிருப்பாரா சுவாமி?... பா.ஜ.க வேட்பாளர் கரு.நாகராஜன் களத்தில் இருக்கும்போதே டி.டி.வி.தினகரனுக்கு ஓட்டு கேட்டு, கமலாலயத்தை கதிகலங்க வைத்திருக்கிறார். “ஆர்.கே. நகரில் கட்சிகள் போட்டிபோட்டுக் கொண்டு பணப்பட்டுவாடா செய்துவருகின்றன ஆர்.கே. நகரில் நியாயமாகத் தேர்தல் நடைபெறவில்லை என்றால் தேர்தலை நடத்திப் பயன் இல்லை” என தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அந்தப் பக்கம் புலம்பித் தீர்க்கும் வேளையில், இந்தப் பக்கம் டி.டி.வி.தினகரனுக்கு ஸ்கோர் செய்திருக்கிறார் சுப்பிரமணியன் சுவாமி. கடந்த ஆகஸ்ட் மாதம் தனது ட்விட்டர் பதிவில், “தமிழகத்தில் பெரும் திருப்புமுனையாக ஸ்டாலினும், தினகரனும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பார்கள். இது விரைவில், ஏன் இன்னும் சில நாள்களிலேயே நடக்கும்”, என ஆரூடம் சொல்லியிருந்தார் சுவாமி. தி.மு.கவுக்கு எதிராகப் போர்க்கொடியுடனே வலம் வரும் இவரின் இந்த கருத்து பல கேள்விகளை எழுப்பியிருந்தது. 

சுப்பிரமணியன் சுவாமி, subramanian swamy

இதுதொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த டி.டி.வி.தினகரன், “சுப்பிரமணியன் சுவாமி மக்கள் நலனில் அக்கறை கொண்டவர். மனதில் பட்டதை துணிச்சலாக கூறுபவர். நான் எப்போதும் அவரை மதிப்பவன். அது அவரது சொந்த கருத்து. அது தொடர்பாக தற்போது எதுவும் கூற முடியாது”, என மழுப்பினார். பின்னர் சசிகலா, தினகரன் மற்றும் அவரது சொந்தங்களின் வீடுகள், நிறுவனங்களில் நடந்த மெகா ரெய்டின்போது, “நீதிமன்றத்தில் சசிகலா பற்றிய தகவல்கள் மட்டுமல்லாமல், கருணாநிதி, கனிமொழி மீதான மோசடிகள் தொடர்பான ஆவணங்களையும் அதிகாரிகளிடம் அளித்திருந்தேன். ஏன் இன்னும் சோதனை இல்லை?”, என திடீர் ட்வீட் செய்திருந்தார். மத்திய பா.ஜ.க அரசு - எடப்பாடி அரசு சேர்ந்து தினகரனுக்கு எதிராக செயல்படுகிறது என குற்றச்சாட்டுகள் வலம் வந்த நேரத்தில், கோட்டுக்கு அந்தப் பக்கம் நின்று ஆடினார் சுவாமி. 

துக்ளக் ஆசிரியர் சோ விமர்சனங்களை கவனித்தால் தெரியும். தி.மு.க.,வையும், கருணாநிதியையும் வறுத்தெடுக்கும் அவர், ஸ்டாலினுக்கு விலக்கு அளிப்பார். சில பேட்டிகளில் கூட ஸ்டாலினின் தலைமையை வரவேற்று பேசியிருக்கிறார். அதேபோல, ஜெயலலிதாவின் சாம்ராஜ்ஜியத்தை அசைத்துப் பார்த்த சுப்பிரமணியன் சுவாமி, அ.தி.மு.க தொண்டர்களால் விரட்டி, விரட்டியடிக்கப்பட்டு அக்கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த சுப்பிரமணியன் சுவாமி, இன்று ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரனுக்கு ஆதரவளிக்கச் சொல்லியிருக்கிறார். ஒருவேளை சுவாமியின் கண்களுக்கு தினகரன் தமிழகத்தின் மீட்பராக தெரிகிறாரோ?.

“டி.டி.வி.தினகரனுக்குதான் தமிழக மக்கள் வாக்களிக்க வேண்டும்”, எனச் சொல்வதில், என்ன பலன்கள் ஒளிந்திருக்கிறது என்பதையும் சுப்பிரமணியன் சுவாமி வெளிப்படையாகச் சொல்லிவிட்டால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். ஒருவேளை தான் பா.ஜ.க.,வை சேர்ந்த எம்.பி., என்பது நினைவுக்கு வந்திருக்குமோ.. என்னவோ?! 

 


டிரெண்டிங் @ விகடன்