மண்ணெண்ணெய் கேனுடன் ஆட்சியர் அலுவலகம் வரும் மக்கள்! - அதிர்ச்சியில் காவல்துறை

 தீக்குளிப்பு
 
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அடுத்தடுத்து தீக்குளிக்க முயற்சிகள் நடப்பதால், போலீஸார் அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளனர். 
 

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் கேபிள் டிவி நடத்திவரும் சாகுல் ஹமீது, அப்பகுதியில் ஐஸ்கிரீம் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். அந்தக் கடைக்கு, 10 வருடங்களுக்கு முன்பு வேலைக்கு வந்த சத்தியசுந்தரி என்பவரை இரண்டாவது திருமணம் செய்ததுடன், அப்பகுதியில் தனியாக வீடெடுத்து, கடந்த 10 வருடங்களாக, குடும்பம் நடத்தியுள்ளார். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக சாகுல், சத்திய சுந்தரியை தவிர்த்து வருவதாகவும், இதுகுறித்து கேட்கப் போன தன்னை, சாகுலின் முதல் மனைவியின் ஆட்கள் மிரட்டுவதாகக் கூறிய சத்திய சுந்தரி, கணவருடன் தன்னை சேர்த்துவைக்கக் கோரி, மனுக் கொடுக்க தனது தாய் மீனாகுமாரியுடன் திருச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்துள்ளார். அப்போது, போலீஸார் சோதனையிட்டதைப் பார்த்து பதறியவர், கையுடன் கொண்டுவந்திருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். அவரைத் தடுத்த போலீஸார், கலெக்டரைச் சந்தித்து புகார் அளிக்க வைத்தனர். இதுகுறித்து விசாரிக்க, திருச்சி கலெக்டர் ராசாமணி உத்தரவிட்டுள்ளார். சத்தியசுந்தரியின் தந்தை மொழிப்போர் தியாகி என்பது குறிப்பிடத்தக்கது. 

இதேபோல திருச்சி கீழசிந்தாமணியைச் சேர்ந்த தரைக்கடை வியாபாரியான முத்துவெங்கட்ராமன், தனக்குச் சொந்தமான நிலத்தை, போலி ஆவணங்கள் மூலம் சிலர் ஆக்கிரமித்துள்ளதாகக் குற்றம்சாட்டி, ஆக்கிரமிப்பாளர்கள்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கடந்த புதன்கிழமை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு குடும்பத்துடன் வந்தவர், திடீரென மண்ணெண்ணெய் கேனை எடுத்து உடலில் ஊற்றித் தீ வைக்க முயன்றார். அதைப் பார்த்த போலீஸார், அவரைத் தடுத்தனர். இதேபோல கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பொன்மலைப்பட்டி மலையடிவாரத்திலுள்ள சகாயமாதா கோயில் தெருவைச் சேர்ந்தவர் செல்வி. கோரிக்கை மனுக்களுடன் வந்தவர் தீக்குளிக்க முயன்றார். 

இப்படியான அடுத்தடுத்த தீக்குளிப்பு முயற்சிகளால், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பல வழிகள் மூடப்பட்டுள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!