பிரான்ஸுக்கு ஏற்றுமதியாகும் இந்திய பூச்சிக் கட்டுப்பாட்டு பொறி! | This Indian invention is being exported to France for agricultural use

வெளியிடப்பட்ட நேரம்: 10:14 (19/12/2017)

கடைசி தொடர்பு:10:32 (19/12/2017)

பிரான்ஸுக்கு ஏற்றுமதியாகும் இந்திய பூச்சிக் கட்டுப்பாட்டு பொறி!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட  பூச்சிக் கட்டுப்பாட்டுப் பொறி, பிரான்ஸ் நாட்டுக்கு ஏற்றுமதி ஆக  உள்ளது. இந்தியாவில் உருவாக்கப்பபட்ட வேளாண் சாதனம்  ஒன்று, வளர்ந்த நாட்டுக்கு ஏற்றுமதி ஆவது, இதுவே முதல்முறை.

இந்தியாவின் வேளாண் உற்பத்தி அதிகமாக இருந்தாலும், உலக வர்த்தகத்தில் இந்திய வேளாண் சமூகம் ஈட்டும் பொருள் குறைவுதான். இதற்குக் காரணமாக, வேளாண் ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் காட்டுவது, தானிய சேமிப்பின்போது ஏற்படும் இழப்புகளைத்தான்.

இந்த இழப்புகளை ஏற்படுத்துவது, தானியங்களை உண்ணும் புழு, பூச்சிகள் மற்றும் வண்டுகள். புழு, பூச்சிகள் தானியங்களிடையே  உருவாகி, தானியங்களைத் துளைத்து அவற்றின் சத்துப் பகுதிகளை உண்பதோடு மட்டுமன்றி, தங்களுடைய கழிவுப் பொருள்களினால் தானியங்களை அசுத்தப்படுத்தி, அவற்றை மனிதப் பயன்பாட்டுக்கு  தகுதி  அற்றவையாக  மாற்றிவிடுகின்றன. 

பொறி

இதைக் கட்டுப்படுத்த,  தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகப் பேராசிரியர், முனைவர் ச.மோகன் வடிவமைத்த பொறி, இந்தியா முழுவதும் பயன்படுத்தப்பட்டுவருகிறது. சமீபத்தில் இப்பொறி, பிரான்ஸ் நாட்டுக்கு ஏற்றுமதிசெய்யப்பட்டு, அங்கு விளைவிக்கப்படும் தானியப் பயிர்களைச் சேமிக்கும்போது, அவற்றில் ஏற்படும் வண்டுகளைக் கண்காணிக்க ஏற்புடையதா எனப் பரிசோதிக்கப்பட்டது. மூன்று மாத ஆய்வுக்குப் பின், இது மக்காச்சோளப் பயிர்களைச் சேமிக்கும்போது ஏற்படும் பூச்சிகளைக் கண்டறிய உகந்தது என்பது கண்டறியப்பட்டுள்ளது. 

குழாய் வடிவில் இருக்கும் இப்பொறியின் மேற்பகுதியில், 2 மி.மீ அளவில் துவாரங்கள் உள்ளன. பொறியின் அடிப்பகுதியில் கூம்பு வடிவ பிளாஸ்டிக் மூடி இருக்கும், மேல் மூடி மட்டும் வெளியே தெரியும்படி இப்பொறியை நேராகத் தானியத்தில் வைக்க வேண்டும் . தானியங்களில் உள்ள பூச்சிகள் நடமாடும்போது, துவாரங்கள் வழியாக பொறியில் நுழைந்து கீழ்நோக்கி விழும். விழுந்த பூச்சிகள், புனல் வடிவ அமைப்பினால் சறுக்கப்பட்டு, கூம்பு வடிவ மூடியில் அகப்பட்டுக்கொள்ளும். வாரம் ஒருமுறை பொறியை வெளியில் எடுத்து, பூச்சிகளை அப்புறப்படுத்த வேண்டும்.

இதைப் பார்த்த பள்ளி மாணவர்கள், இப்பொறியின் செயல்பாட்டை அடிப்படையாகக்கொண்டு பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலம் இதே பொறியை மறு உருவாக்கம் செய்திருக்கிறார்கள். 

இக்கருவியை வடிவமைத்த பேராசிரியர், முனைவர் மோகனிடம் பேசினோம். "இந்தியாவின் அறிவியல் உலகம், குறிப்பாக வேளாண் அறிவியல் உலகம், பயணிக்கவேண்டிய தூரம் அதிகமா இருக்கு . இந்தப் பொறி,  பல ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டாலும் தற்போதுதான்  உலகம் இதை கவனிக்கத் தொடங்கியிருக்கு. வேளாண் அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்த அரசும்,பொதுமக்களும் முன் வரணும். அடுத்த தலைமுறை என்னவிட சிறப்பான கண்டுபிடிப்புகளை உலகத்துக்குத் தரணும்" என்றார்.