`விஜயபாஸ்கரை ஏன் முன்னிறுத்துகிறார் எடப்பாடி பழனிசாமி!' - அதிரும் ஆர்.கே.நகர் தேர்தல் களம் | Why Edappadi palanisamy gives importance to Minister Vijayabaskar #RKNagar

வெளியிடப்பட்ட நேரம்: 11:01 (19/12/2017)

கடைசி தொடர்பு:14:02 (04/07/2018)

`விஜயபாஸ்கரை ஏன் முன்னிறுத்துகிறார் எடப்பாடி பழனிசாமி!' - அதிரும் ஆர்.கே.நகர் தேர்தல் களம்

ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் களத்தில் ஆளுமைக் காட்டி வரும் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது மற்ற அமைச்சர்கள் ஏகப்பட்ட கடுப்பில் இருப்பதாகப் பரபரப்பு தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

இது குறித்து நம்மிடம்  பேசிய அதிமுகவினர், "ஆர்.கே.நகர் தேர்தல் அறிவிக்கப்பட்டதுமே எடப்பாடி பழனிசாமி விஜயபாஸ்கரிடம்தான் பொறுப்பை ஒப்படைத்தார். அதற்குக் காரணம் கடந்தமுறை டி.டி.வி.தினகரனுக்காக வேலை பார்த்த அனுபவம் அவரிடமிருந்தது. அனுபவம் என்று நாங்கள் எதைக் குறிப்பிடுகிறோம் என்பதை நீங்கள் புரிந்துகொண்டிருப்பீர்கள். இந்த வாய்ப்பை நன்றாகவே விஜயபாஸ்கர் பயன்படுத்திக்கொண்டார். கடந்தமுறை தினகரனுக்காக வேலை பார்த்தபோது, களப்பணியில் மன்னார்குடி ஆட்களை திவாகரன் இறங்கிவிட்டார். அந்த ஆட்களை வைத்துக்கொண்டுதான் அப்போது விஜயபாஸ்கர் வேலை செய்தார். ஆனால், இந்தமுறை நிலைமை அப்படியே தலைகீழ் ஆகிவிட்டது. கடந்த முறை யாருக்காகத் தேர்தல் வேலைப் பார்த்தாரோ அவரை எதிர்த்து சகல விஷயங்களிலும் வியூகங்கள் அமைக்க வேண்டிய நெருக்கடி விஜயபாஸ்கருக்கு இருந்தது.

தொடக்கத்தில் கொஞ்சம் மிரண்டுகிடந்த அவருக்கு மதுசூதனன் போட்டியிடுகிறார் என்பது அறிவிக்கப்பட்டபோதே ஓர் உத்தரவாதம் பழனிசாமி தரப்பில் கொடுக்கப்பட்டது. அது 'வைட்டமின் ப'தான். கடந்தமுறை 89 கோடி ரூபாய் பட்டுவாடா செய்து தேர்தல் ரத்து செய்ய காரணமாக இருந்தவர் விஜயபாஸ்கர்தான். அரசியலைப்  பொறுத்தவரை, அவையெல்லாம் தகுதியாகக் கருதப்படும். அந்தத் தகுதியை இந்தத் தேர்தலில் தக்கவைத்துக்கொள்ள களம் இறங்கியபோதுதான் நடிகர் விஷால் விஜயபாஸ்கருக்கு ஜெர்க் காட்டினார். அவர் ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடுகிறார் என்ற செய்திகள் வந்தபோதே, மதுசூதனிடமும் எடப்பாடி பழனிசாமியிடமும் விஷால் போட்டியிட்டால் நாம் பின்னடைவை சந்திக்க வேண்டியிருக்கும் என்று எடுத்துக்கூறியவரே விஜயபாஸ்கர்தான். 'அண்ணே , விஷால் போட்டியிட்டால், உங்களுக்காக நான் என்னதான் உழைத்தாலும் நீங்கள் வெற்றி பெறுவது உத்தரவாதமில்லாத விஷயமாக போயிடும்' என்று எச்சரிக்கை செய்தவரே விஜயபாஸ்கர்தான்.அதன்பிறகுதான் விஷால் மனு தள்ளுபடி செய்யபட வியூகங்கள் வகுக்கப்பட்டது" என்றவர்கள் மீண்டும் விஜயபாஸ்கர் தேர்தல் களத்தில் தீவிரமாக இறங்கிய பின்னணியை விவரித்தார்கள். 

"விஷால் பரபரப்பு அடங்கியதுமே புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து தன் ஆதரவாளர்கள் ஆயிரம் பேர்களைக் களத்தில் இறக்கிவிட்டார். பகல் நேரத்தில் கும்பலாகப் பிரசாரத்தில் ஈடுபடும் இவர்கள் இரவு நேரத்தில் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணப் பட்டுவாடா அசைன்மென்ட்டை பக்காவாக முடித்தார்கள். தினகரன் தரப்பே திகைத்துப்போகும் அளவுக்கு இவர்களின் நெட்வொர்க் நேர்த்தியாக இருந்தது. தொகுதி முழுக்க புதுக்கோட்டை ஆட்களே நிரம்பி வழிந்தனர். சில இடங்களில் தினகரன் தரப்பினருக்கும் விஜயபாஸ்கர் தரப்பினருக்கும் மோதல்கள் வெடித்தது. பிரசாரமும் பட்டுவாடாவும் தீவிரமாக இருந்தபோது, விஜயபாஸ்கரின் ஆளுமை ஆர்.கே.நகரில் கொடிக்கட்டிப் பறந்தது. இதில் சக அமைச்சர்கள் கடுப்பாகிக் கிடக்கிறார்கள். விஜயபாஸ்கரின் வெளிப்படையான நடவடிக்கைகள் மீண்டும் தேர்தல் ரத்து செய்யப்படும் சூழலை இப்போது உருவாகிவிட்டது என்று சக அமைச்சர்களே அவர்மீது அதிருப்தியை வெளிப்படுத்தும் அளவுக்கு நிலைமை சீரியசாகிவிட்டது .ஆனால் ஒன்று ,தேர்தல் ரத்து செய்யப்பட்டால் அதற்குக் காரணமாக இந்தமுறை விஜயபாஸ்கர் மட்டுமே இருக்கப்போவதில்லை. டி.டி.வி.தினகரனும் முக்கியக் காரணமாக இருப்பார்" என்றார்கள்.


[X] Close

[X] Close