குச்சனூரில் சனீஸ்வர பகவான்! - ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

தமிழகத்தில், சனீஸ்வர பகவானுக்கு என தனியாகக் கோயில் இருப்பதும், வரலாற்றுச் சிறப்புமிக்கதுமானவை திருநள்ளாறும், குச்சனூரும்தான். தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ளது குச்சனூர். கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளில் புராதனச் சிறப்புமிக்க சுரபி நதிக்கரையில் வீற்றிருக்கிறார், குச்சனூர் சனீஸ்வர பகவான். ஆடிமாதத் திருவிழாவும், இரண்டரை வருடத்துக்கு ஒரு முறை நடக்கும் சனிப்பெயர்ச்சியின்போதும் கோயில் திருவிழாக்கோலம் பூண்டுவிடும். இன்று காலை 10.02 மணிக்கு விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்ந்தார் சனீஸ்வர பகவான்.

இந்நிகழ்வைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் குச்சனூர் வந்திருக்கிறார்கள். இதனால், காவல்துறை தரப்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகப்பு வேலி அமைக்கப்பட்டு, வரிசையாக பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். தேனி மற்றும் சின்னமனூரிலிருந்து நகரப் பேருந்து வசதி குச்சனூருக்கு உள்ளது. சனிப்பெயர்ச்சி தினமான இன்று, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்புப் பேருந்துகள் தேனி மற்றும் சின்னமனூரிலிருந்து இயக்கப்பட்டுவருகிறது.

நேரம் செல்லச்செல்ல, குச்சனூருக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால், பாதுகாப்புக் காரணங்களுக்காக  அதிக அளவில் போலீசார் குவிக்கப்படலாம் என்கின்றது காவல்துறை.

கோயிலுக்கு வரும் பக்தர்கள், தங்கள் ராசிக்கான சனி தோஷத்தின் வீரியத்தைக் குறைக்கவேண்டியும், துன்பங்கள் நீங்கி வாழ்க்கையில் வெற்றிபெறவும், வரும் தீவினைகளைத் தடுத்து, நல்ல பாதையில் நம்மை வழிநடத்திச்செல்லவும் நீண்ட வரிசையில் காத்திருந்து சுயம்பு சனீஸ்வரபகவானை வழிபட்டுச்சென்றார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!