வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (19/12/2017)

கடைசி தொடர்பு:14:20 (19/12/2017)

மருந்து மாத்திரை, தடுப்பூசி இல்லாமல் 9 பிள்ளைகள்! மருத்துவத்துறையை மலைக்கவைத்த கிருஷ்ணகிரி பெண்

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி-யை அடுத்துள்ள உனிசேநத்தம் பஞ்சாயத்து பசவனபுரம் மலைக் கிராமத்தைச் சேர்ந்த ராஜம்மாவுக்கு எப்படியாவது குடும்பக் கட்டுப்பாடு செய்துவிட வேண்டும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், தொண்டு நிறுவனம் மூலமாகக் கடந்த ஒரு வருடமாகக் கண்காணித்து வருகிறது. யார் இந்த ராஜம்மா என்று விசாரித்தோம்.

மருத்து மாத்திரை இல்லை ராஜம்மா

20 வருடங்களுக்கு முன்பு எதுரப்பா என்பவரைத் திருமணம் செய்துகொண்ட ராஜம்மா மருத்துவத்துறை கண்காணிப்பு இல்லாமல் அரசாங்கத்திடம் எந்தச் சலுகையும் பெறாமல் 9 குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். இதனால் ஆண்டுதோறும் ரேஷன் கார்டில் குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் கூடுமே தவிர மாவட்ட மருத்துவ கண்காணிப்பில் இடம்பெறாது. பெற்றெடுத்த 9 குழந்தைகளில் ஒரு குழந்தைக்குகூட மருத்துவ உதவியை ராஜம்மா பெறவில்லை என்பது ஆச்சர்யமான தகவல். 

இதுகுறித்து ராஜம்மாவிடம் பேசும்போது, ``எனக்கு மருந்து மாத்திரை மீது துளியும் விருப்பமும் இல்லை; நம்பிக்கையும் இல்லை. நான் பெற்றெடுத்த குழந்தைகளில் 5 பேர் மலையில் காட்டுப்பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தபோது காட்டில் பிறந்தவர்கள். மீதி நான்கு பேர் வீட்டில் பிறந்தவர்கள். எனவே, நான் மருத்துவமனைக்குப் போக வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. என் குழந்தைகளுக்குகூட இதுவரைக்கு நான் தடுப்பூசி போடவில்லை. அவர்கள் அனைவரும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். என்னோட முதல் பொண்ணுக்கு திருமணம் வைத்துள்ளேன். அதனால் இனி குழந்தைகள் வேண்டாம் என்று குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்ளலாம் என்று இருக்கிறேன்'' என்றார்.