வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (19/12/2017)

கடைசி தொடர்பு:14:40 (19/12/2017)

ஆசையாய் வாங்கிய வாகனத்தில் பயணம்! சகோதரர், நண்பர்களின் உயிரைப் பறித்த கன்டெய்னர்

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராக்கியாபாளையம் பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள், கார்த்தி மற்றும் மாணிக்கராஜ். இவர்களில் கார்த்திக் என்பவர் கடந்த வாரம் புதியதாக மாருதி  வேன் ஒன்றை வாங்கியுள்ளார். கார்த்திக்கும் சகோதரர் மாணிக்கராஜும், அதே பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் அஜ்மீர், சரவணன், முகமது உசைன் மற்றும் முகமது மைதீன் ஆகிய 4  பேரை அழைத்துக்கொண்டு, புதிதாக வாங்கிய மாருதி வேனில் கோவைக்குச் சென்றுவிட்டு, நள்ளிரவில் திருப்பூர் நோக்கி வந்துகொண்டிருந்தனர். வேன், குப்புசாமிநாயுடு புரம் பகுதி அருகே வந்துகொண்டிருந்தபோது, எதிரில் கோவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஒரு கண்டெய்னர் லாரிமீது திடீரென பயங்கரமாக மோதியது.

இந்தக் கோர விபத்தால், வேனில் பயணம் செய்த சகோதரர்கள் கார்த்திக், மாணிக்கராஜ் மற்றும் அஜ்மீர், சரவணன் ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த முகமது உசைன் மற்றும் முகமது மைதீன் ஆகியோரை சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், விபத்தில் இறந்துபோன 4 பேரின் உடல்கள், பல்லடம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டன. சம்பவம்குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தற்போது விசாரணை நடத்திவருகின்றனர்.