சனீஸ்வர பகவானைத் தரிசிக்க குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்!

பிரசித்திபெற்ற சனீஸ்வர பகவான் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் தனிச் சந்நிதியில் அமர்ந்து அருள்பாலிக்கிறார். அக்கோயிலில் இன்று சனி பகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு இடம்பெயரும் நிகழ்ச்சி காலை 10.01 மணிக்கு சிறப்பாக நடைபெற்று முடிந்தது.  

நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் நேற்று இரவே திருநள்ளாறில் வந்து குவிந்துவிட்டார்கள். இன்று அதிகாலை ஒரு மணி முதலே நளன் தீர்த்தத்தில் நீராடி, அணிந்த உடைகளைக் கரைகளில் விட்டுவிட்டு, புத்தாடை அணிந்து கலிதீர்த்த விநாயகரை வணங்கி, தேங்காய் உடைத்து சனீஸ்வர பகவானைத் தரிசிக்க நீண்ட வரிசையில் காத்திருந்தார்கள். இதுவரை 2 ஆயிரம் பேர் மட்டுமே நளன் குளத்தில் நீராடும் வசதி இருந்தது. தற்போது, நான்குபுறமும் படித்துறை அமைக்கப்பட்டு, ஒரே நேரத்தில் 10 ஆயிரம் பேர் குளிக்க வசதி செய்யப்பட்டிருந்தது. அழுக்குநீர் வெளியேறவும் புதியநீர் குளத்தில் புகவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நளன் குளத்தைச் சுற்றிலும் இலவசக் கழிப்பிட வசதிகளும் பெண்களுக்கான உடைமாற்றும் அறைகளும் அமைக்கப்பட்டிருந்தன. பாதுகாப்புப் பணியில் சுமார் 2 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். சிறப்புப் பேருந்து வசதிகளும் கூடுதல் ரயில்பெட்டி வசதிகளும் பக்தர்கள் வருகைக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நேற்றும் இன்றும் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டிருந்தது.  

சுமார் 4 லட்சம் பக்தர்கள் சனிபகவானை தரிசிக்க வந்த நேரத்தில் காலை 9.30 மணிக்கு தருமபுரம் ஆதீனம் சண்முகதேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் தலைமையில் சனிபகவானுக்கு சிறப்பு ஆராதனை தொடங்கியது. அவருடன் மாவட்டக் கலெக்டர் கேசவன், தேவஸ்தான நிர்வாக அதிகாரி விக்ரந்தராஜா உடனிருந்தனர். சரியாக 10.01 மணிக்கு சனீஸ்வரபகவான் இடப்பெயர்ச்சியடைவதை உணர்த்தும் விதமாக மகாதீபம் காட்டும்போது பக்தர்கள் சனீஸ்வரா என்று பக்தி கோஷமிட்டனர்.   

முன்னதாக நேற்று இரவு தங்க காக்கை வாகனத்தில் சனீஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று வானம் மேகமூட்டத்துடன் இருந்ததால் பக்தர்கள் சிரமமின்றி சனீஸ்வரபகவானை தரிசனம் செய்ய முடிந்தது. பக்தர்களின் தரிசனம் தொடர்கிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!