வெளியிடப்பட்ட நேரம்: 16:15 (19/12/2017)

கடைசி தொடர்பு:12:58 (20/12/2017)

கோவை டு ஊட்டிக்கு மூன்றாவது பாதையா?- கொதிக்கும் இயற்கை ஆர்வலர்கள்

ஊட்டி

’வனச் சாலைகளை அகலப்படுத்தி பொதுப் பாதைக்குத் திறந்துவிடுவது, காடுக்கும் காட்டு உயிர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்’ என கோவையிலிருந்து ஊட்டிக்குச் செல்ல அமைக்கப்படும் மூன்றாவது அகலப்பாதைக்கு, இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கோவையிலிருந்து ஊட்டிக்குச் செல்ல, மேட்டுப்பாளையம் - குன்னூர் வழியாகவும், மேட்டுப்பாளையம்-கோத்தகிரி வழியாகவும் என இரண்டு பாதைகள் உள்ளன. இந்த இரண்டு பாதைகளிலும் 24 மணி நேரமும் போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது. இதுபோக, கூடலூரிலிருந்து ஊட்டி வரை நடுவட்டம் வழியாகவும் கல்லட்டி வழியாகவும் இரண்டு சாலைகள் உள்ளன. தற்போது காரமடை, வெள்ளியங்காடு, முள்ளி வழியாக மூன்றாவது பாதை அமைக்கத் திட்டமிடுவதாகவும், அது காட்டு உயிர்களைப் பாதிக்கும் என்றும் முதலைமைச்சருக்கு ‘ஓசை’ சுற்றுச்சூழல் அமைப்பு கடிதம் எழுதியுள்ளது.

இதுதொடர்பான கடிதத்தில், “புதிதாகப் பொதுப்பாதை அமைக்கப்படவிருக்கும் பகுதியில் ஓடும் பவானி ஆற்றின் கரையோரம் உள்ள மரங்களில் கறுப்பு இருவாட்சி, மலபார் கறுப்பு வெள்ளை இருவாட்சி போன்ற அரிய வகை இருவாட்சிப் பறவைகளின் வாழ்விடமாக உள்ளது. இந்தக் காட்டுப்பகுதியில் வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டால், இந்த அரிய வகைப் பறவை இனமும் அழிவின் வாயிலுக்குத் தள்ளப்படும். குறிப்பாக, இந்தப் புதிய வழி மலைப்பாதையை அகலப்படுத்தும்போது, பின்னாளில் நிலச்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. மக்களுக்கு மேட்டுப்பாளையம், குன்னூர் வழியாக ஊட்டிக்குச் செல்லும் பாதைகளைவிட புதிதாக அமையவிருக்கும் பாதை 30 கி.மீ தூரம் அதிகம். இது நேர விரயம், எரிபொருள் விரயம் எனப் பல பிரச்னைகள் உள்ளன.

இந்தச் சாலை, இத்தனைக் காலம் வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்துவந்தது. ஆனால், இப்பாதையை பொதுப் பயன்பாட்டுக்காக அகலப்படுத்தும்போது, இப்பகுதியில் இருக்கும் வன உயிரினங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். கோவையிலிருந்து ஊட்டிக்குச் செல்ல புதிதாக அமைய உள்ள இந்த காட்டுப்பாதைக்கு அருகில் யானைகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இப்பாதை, பொதுப்பாதைக்குத் திறந்துவிடப்படும்போது, யானைகளின் இயல்பான நடமாட்டம் பாதிக்கப்படும்” என வருத்தம் தெரிவிக்கின்றனர்.