வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (19/12/2017)

கடைசி தொடர்பு:18:14 (23/07/2018)

`தனக்குத்தானே கழுத்தை அறுத்துக்கொண்டனர்' - பதறவைத்த வடமாநில இளைஞர்கள்

வடமாநிலத்தைச் சேர்ந்த இரண்டு வாலிபர்கள் தங்களது கழுத்தைத் தாங்களே அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் புதுக்கோட்டையில் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை அருகே உள்ள திருவப்பூர் ரயில்வே கேட் அருகே இன்று காலையில், ரத்தவெள்ளத்தில் சுயநினைவற்ற நிலையில் இரண்டு வாலிபர்கள் கிடந்திருக்கிறார்கள். அந்த வழியே சென்ற உள்ளூர் நபர்கள் அவர்கள் கிடக்கும் நிலையைப் பார்த்து அதிர்ச்சியாகி, உடனடியாக திருக்கோகர்ணம் போலீஸாருக்குத் தகவல் கொடுத்திருக்கிறார்கள். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், இருவரையும் ஆம்புலன்ஸில் ஏற்றி, சிகிச்சைக்காகப் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். "அந்த இரண்டு பேரும் சில நாள்களாகவே திருவப்பூர் கடைவீதியில் சுற்றிக்கொண்டுத்திரிந்தார்கள். இப்போதுதான் எங்கு பார்த்தாலும் வடமாநில ஆட்கள் வேலை செய்கிறார்களே. அப்படி இவர்களும் ஏதாவது ஹோட்டலிலோ வேறு கடைகளிலோ வேலைப் பார்ப்பவர்கள்போல என்று நினைத்துக்கொண்டோம். அடிக்கடி ரயில்வே கேட் அருகில் நடமாடுவார்கள். இயற்கை உபாதைக்காக அந்தப் பக்கம் போகிறார்கள் என்று நினைத்தோம். போகிறபோது நன்றாகப் போகிறவர்கள் வருகிறபோது, அரைமயக்கத்தில்தான் வருவார்கள். ஏதோ போதை வஸ்து பயன்படுத்துகிறார்கள் என்பது புரிந்தது. இன்று காலையில் எதேச்சையாக அந்தப்பக்கம் போனபோதுதான் அவர்கள் இந்த நிலைமையில் இருப்பது எங்களுக்குத் தெரிந்தது" என்றார்கள் திருவப்பூரைச் சேர்ந்த வியாபாரிகள் சிலர்.

இதுகுறித்து திருக்கோகர்ணம் போலீஸாரிடம் விசாரித்தோம். "இரண்டு பேருமே வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவனுடைய சட்டைப் பையில் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்ததன் அடையாளமாக, ஓபி ரசீது இருந்தது. அதில், நாகராஜன் என்று பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. இன்னொருவன் பெயர் தெரியவில்லை. அவர்கள் இருவரும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்போல தெரிகிறார்கள். அத்துடன் லாகிரி பழக்கம் கொண்டவர்கள் போலவும் இருக்கிறார்கள். இப்போது இரண்டு பேரும் நன்றாக இருக்கிறார்கள். கழுத்தை அறுத்துக்கொண்டிருப்பதால், அவர்களால் பேசமுடியவில்லை. குணமானபிறகுதான் அவர்களைப் பற்றிய முழுவிவரங்களும் தெரியவரும்" என்றார்கள்