வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (19/12/2017)

கடைசி தொடர்பு:10:19 (20/12/2017)

`293 வது ஆதீனமா' நித்யானந்தாவை எச்சரித்த நீதிபதி

மதுரையைச் சேர்ந்த ஜெகதலபிரதாபன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "மதுரை ஆதீனத்தின் 292 வது ஆதீனமாக அருணகிரிநாதர் கடந்த 25 ஆண்டுகளாக இருந்து வருகிறார். கடந்த 2012-ல் பிடுதியில் தியான பீடம் நடத்தி வரும் ராஜசேகர் என்ற நித்யானந்தா ஆதீன மடத்துக்குள் நுழைய முற்பட்டார். சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் நித்யானந்தா தன்னை ஆதீனம் மடத்தின் 293 வது மடாதிபதியாகப் பிரகடனப்படுத்திக்கொண்டார். நித்யானந்தா நியமனத்தை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தோம்.

அந்த வழக்கில் நித்யானந்தா ஆதீனமாக நியமனம் செய்வதற்கு தகுதியுடையவர் அல்ல என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நித்யானந்தா ஆதீனம் மடத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர், நித்யானந்தா மடத்துக்குள் நுழைய நீதிமன்றம் தடை விதித்தது. இந்தத் தடையை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுகளை மறைத்து, சட்டத்துக்குப் புறம்பாக நீதிமன்றத்தைத் தவறாகப் பயன்படுத்தி, ஆதீன மடத்தையும் அதன் விலை மதிப்பில்லா சொத்துகளையும் கைப்பற்ற வேண்டும் என எண்ணத்துடன் உயர் நீதிமன்ற கிளையில் ஆதீன மடத்துக்குள் செல்ல போலீஸ் பாதுகாப்புக் கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ளார்.

மடத்துக்குள் நுழைவதற்கு நித்யானந்தாவுக்கு போலீஸ் அனுமதி வழங்கினால், தேவையில்லாத சர்ச்சைகளும் சட்டம் - ஒழுங்கு பிரச்னையும் ஏற்படும். நித்யானந்தா ஆதீனம் மடம் உள்பட பல்வேறு சைவ மடங்களைச் சட்டவிரோதமாகக் கைப்பற்றும் வகையில் முயற்சி செய்து வருகிறார். கர்நாடகாவில் லிங்காயத்து மடத்தைக் கைப்பற்ற முயன்றபோது பொதுமக்கள் மடத்திலிருந்து நித்யானந்தாவை விரட்டியடித்தனர். தற்போது மதுரை ஆதீனம் மடத்தை அபகரிக்க முயல்கிறார். இதனால் ஆதீனம் மடத்துக்குள் நுழையவும், அருணகிரிநாதரின் நிர்வாகத்தில் தலையிடவும் நித்யானந்தாவுக்குத் தடை விதிக்கவும், நித்யானந்தாவிடமிருந்து ஆதீன மடத்தைப் பாதுகாக்கவும் மடத்துக்குள் நுழைய நித்யானந்தாவுக்கு நிரந்தர தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்த அக்டோபர் 11-ல் ஆதினம் மடத்துக்குள் நுழைய நித்யானந்தாவுக்கு இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கில் நித்யானந்தா தரப்பில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், "தான் மதுரை ஆதீனத்தின் 293-வது மடாதிபதி என்றும், 2012 ஏப்ரல் 27-ல் இளைய ஆதினமாக நியமிக்கப்பட்டதாகவும், ஒருமுறை இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டால் அவர் வாழ்க்கை முழுவதும் ஆதீனமாகவே இருப்பார். அந்த நியமனத்தை எவராலும் ரத்துசெய்ய முடியாது" எனப் பதில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இன்று வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், 292-வது ஆதீனம் உயிரிரோடு இருக்கும்போது, 293-வது ஆதீனம் என எப்படி குறிப்பிடலாம். அவ்வாறு தாக்கல்செய்த பதில்மனுவை நித்யானந்தா  திரும்பப் பெறுவதற்கான மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும். இல்லையெனில், அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

மேலும், அரசுத்தரப்பில் தாக்கல்செய்த பதில் மனுவிலும், "292-வது ஆதீனம் உயிரோடு இருக்கும்போது, 293-வது ஆதீனம் எனக் குறிப்பிட இயலாது. மேலும், அவரை நியமனம்செய்த அருணகிரி நாதரே அந்த நியமனத்தை ரத்துசெய்வதாகக் கூறியுள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, வழக்கை ஜனவரி 3-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க