வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (19/12/2017)

கடைசி தொடர்பு:19:00 (19/12/2017)

இனி ஆண்டுக்கு இரண்டு முறை நீட் தேர்வு!

மருத்துவச் சேர்க்கைக்கும் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கும் ஆண்டுக்கு இரண்டு முறை தகுதித்தேர்வு நடத்தப்படும் என்று மனித வளத்துறையின் இணை அமைச்சர் உபேந்திரா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நீட் தேர்வு எழுதும் மாணவர்கள்

நாடாளுமன்றத்தில் இன்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த உபேந்திரா குஷ்வாஹா, 'உயர் கல்விக்காகத் தேசிய அளவில் நுழைவுத் தேர்வுகளை நடத்துவதற்கு, தன்னிச்சையான அதிகாரம் கொண்ட நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி ஏற்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.

இந்த அமைப்பு இனி ஆண்டுக்கு இரண்டு முறை இணையம் வழியாக மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வையும் பொறியியல் படிப்புக்கான JEE நுழைவுத்தேர்வை நடத்தும். இதன்மூலம், மாணவர்கள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. முதல் தடவை தேர்வுப்பெற தவறினாலும் அடுத்த ஆறு மாத காலத்தில் மீண்டும் ஒரு வாய்ப்பைப் பெற முடியும்' என்று கூறினார். 

தற்போது, இடைநிலை கல்வி வாரியம் (CBSE) மருத்துவப் படிப்புக்கான தகுதித்தேர்வையும் (NEET) பொறியியல் கல்லூரியில் சேர JEE தேர்வையும் நடத்தி வருகிறது. இந்தத் தேர்வுகளை நடத்துவதன் காரணமாக இடைநிலைக் கல்வி வாரியத்தின் பணிச்சுமை அதிகரித்திருக்கிறது என்றும் நாடு முழுவதுமாக நுழைவுத்தேர்வை நடத்துவது கடினமாக இருக்கிறது என்றும் ஏற்கெனவே சி.பி.எஸ்.இ  இயக்குநர் தெரிவித்திருந்தார். இதையடுத்து, இந்தத் தேர்வுகளைப் பிரதியோகமாக நடத்துவதற்காகவே புதியதாக நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி (National Testing Agency) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.