வெளியிடப்பட்ட நேரம்: 17:38 (19/12/2017)

கடைசி தொடர்பு:17:38 (19/12/2017)

‘‘சனிப்பெயர்ச்சியால் இனி தினகரன் கோலோச்ச முடியாது!’’

தினகரன்

‘சனியைப்போல் கொடுப்பாரும் இல்லை; சனியைப்போல் கெடுப்பாரும் இல்லை’ என்று சொல்லப்படுவது உண்டு. அப்படிப்பட்ட சனிப்பெயர்ச்சியானது, இன்று விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு இடம்பெயர்கிறது. சனி பகவானின் இந்தப் பெயர்ச்சி, சிலருக்கு நன்மைகளையும், தீமைகளையும் தரப்போகிறது. அதிலும், குறிப்பாக நம் அரசியல்வாதிகளுக்கு எப்படிப்பட்ட பலன்களைத் தரப்போகிறது என்று இங்கே பார்க்கலாம்...

ஒருவர், எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவருடைய ஜாதகத்தில் சனிப் பார்வை இல்லையெனில், அவர் நினைக்கும் மாத்திரத்தில்  எல்லாமே முடிந்துபோகும். அதேவேளையில், சனியால் யோக பலன்களை அனுபவிக்க வேண்டும் என்று இருந்தால் அதை யாராலும் மாற்ற முடியாது. இதைத்தான், ‘சனி கொடுத்தால் அதை யார் தடுப்பார்’ என்பார்கள்.

தேவேந்திரனைப் பிடித்த சனி!

ஒருசமயம் சனி பகவானிடம் சென்ற தேவேந்திரன், ‘‘நான் தேவர்களுக்கெல்லாம் தலைவன். என்னை நீ எப்படிப் பிடிக்கலாம்’’ என்று கேட்டார். அதற்கு சனி பகவான், ‘‘நான் நீதிமான். எல்லோரையும் சமமாகப் பாவித்துத்தான் கிரக பரிபாலனம் செய்துவருகிறேன். என் பார்வையில் இருந்து எவரும் தப்ப முடியாது’’ என்றார். அதற்கு தேவேந்திரன், ‘‘அப்படியென்றால், நீ என்னைப் பிடிக்கும் நேரத்தைச் சொல்’’ என்று வேண்டினார். அவர் வேண்டுதல்படி சனி பகவானும் அந்த நேரத்தைச் சொல்லியனுப்பினார். இந்த நிலையில், சனி பகவான் குறிப்பிட்ட அந்த நேரம் வந்ததும் தேவேந்திரன் பெருச்சாளி உருவம்கொண்டு சாக்கடையில் போய் மறைந்துகொண்டார். பிறகு, சனி பகவான் குறிப்பிட்ட காலம் கடந்து வெளியே வந்த தேவேந்திரன்... நேரே சனி பகவானிடம் சென்று, ‘‘உங்கள் பார்வையிலிருந்து தப்பிவிட்டேன் பார்த்தீர்களா’’ என்று சொல்ல... அதற்கு சனி பகவான் சிரித்துக்கொண்டே, ‘‘நீங்கள் சிம்மாசனத்தைவிட்டு, சாக்கடையில் சென்று உழன்றீர்களே... அதுகூட என் பார்வை பீடிப்பினால்தான்’’ என்றார். 

இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால், ஆட்சியில் அமர்ந்திருக்கும் முதல்வரே ஆனாலும், ஆட்சியில் இல்லாத எதிர்க் கட்சியின் அடிமட்டத் தொண்டனாக... என யாராக இருந்தாலும் சனியின் பார்வையிலிருந்து தப்பிக்க முடியாது. தேவர்களின் தலைவனான தேவேந்திரனுக்கே இந்த நிலை என்றால், நம் அரசியல்வாதிகளுக்கு இந்தச் சனிப்பெயர்ச்சி எப்படியிருக்கும்? ஜோதிட நிபுணர் சூரிய நாராயணமூர்த்தியிடம் பேசினோம். 

‘‘தினகரனால் கோலோச்ச முடியாது!’’ 

சூரிய நாராயணமூர்த்தி‘‘பொதுவாக இந்தச் சனிப்பெயர்ச்சியானது அரசியல்வாதிகளுக்குச் சிரமத்தைத்தான் தரப்போகிறது. நல்லது செய்வோம் என்ற எண்ணத்தை அவர்களுக்கு இந்தப் பெயர்ச்சி தரவல்லாது, கெட்ட எண்ணத்தையும் கெட்டச் செயல்களையும் தரக்கூடியதாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக அரசியல்வாதிகளுடைய குணங்களே இந்தச் சனிப்பெயர்ச்சியால் மொத்தமாக மாற இருக்கிறது. இந்த முறையும் ஆர்.கே.நகரில் பணப் பட்டுவாடா தலைவிரித்தாடுகிறது. அது ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் ஆளும் கட்சிக்கே வெற்றி வாய்ப்பிருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை ஆட்சி மாற்றம் இருக்காது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆகையால், அவரே ஆட்சியில் தொடருவார். அதேபோல், துணை முதல்வரான ஓ.பன்னீர்செல்வத்துக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆகையால், அவரும் தம் பணியில் கொடிகட்டிப் பறப்பார். அதேநேரத்தில் ஆளும் பி.ஜே.பி. அரசின் பிரதமராக இருக்கும் மோடி, இன்று மக்களால் சந்திக்கும் கெட்டப் பெயர்களைவிட எதிர்காலத்தில் இன்னும் அதிகம் சந்திப்பார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அவர் சார்ந்திருக்கும் பி.ஜே.பி. வெற்றிபெற வாய்ப்பில்லை.

தி.மு.க. செயல் தலைவரும், எதிர்க் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு இந்தச் சனிப்பெயர்ச்சியானது நன்மைகளையே தரக்கூடியதாக இருக்கிறது. அவருக்கு, நல்ல சாதகங்களைத் தரப்போகிறார் சனி பகவான். டி.டி.வி.தினகரனைப் பொறுத்தவரை இந்தச் சனிப்பெயர்ச்சியானது, அவரை உயர்ந்த நிலைக்குக் கொண்டுசெல்லாவிட்டாலும் ஓரளவுக்குச் சாதகமான பலன்களைத் தரும். ஏதோ பெயர் சொல்லும் அளவுக்கு அவர் பேசப்படலாமே தவிர, மற்றபடி அ.தி.மு.க-வைக் கைப்பற்றுவது என்பதெல்லாம் முடியாத காரியம். குறிப்பாக இந்தச் சனிப்பெயர்ச்சியால் தீவிபத்துகள் அதிகம் நடக்க வாய்ப்பிருப்பதால் அரசியல் உள்ளிட்ட காரணங்களால் தீவிபத்துகள் ஏற்படலாம். காடுகளும் அழிய வாய்ப்பிருக்கிறது’’ என்றார்.

சாதகமானாலும், பாதகமானாலும் அரசியல்வாதிகளையும் விட்டுவைப்பதில்லை சனிப்பெயர்ச்சி. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்