வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (19/12/2017)

கடைசி தொடர்பு:22:00 (19/12/2017)

டீக்கடை முதல் பியூட்டி பார்லர் வரை கூவிக் கூவி விற்பனை! லாட்டரி மாநகரமாக மாறிவரும் ஈரோடு

''ஈரோடு மாவட்டத்தில் ஏழை கூலித் தொழிலாளிகளைக் குறிவைத்து ஒரு நம்பர் லாட்டரி சீட்டு பட்டப் பகலில் பகிரங்கமாக விற்கப்படுகிறது. காவல்துறையும், ஆளுங்கட்சியினரும் கமிஷன் பெற்றுக்கொண்டு இந்த ஒரு நம்பர் லாட்டரி சீட்டை அனுமதிக்கிறார்கள்'' என்று குமுறுகிறார் காங்கேயம் முன்னாள் எம்.எல்.ஏ. விடியல் சேகர்.

இதுப்பற்றி காங்கேயம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளருமான விடியல் சேகர், ''தமிழகத்தில் லாட்டரி சீட்டுகளுக்குத் தடை இருக்கிறது. ஆனால் ஈரோடு மாவட்டத்தில் ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகள் பகிரங்கமாகப் பட்டப் பகலில் விற்கப்பட்டு வருகிறது. சென்னிமலையில் அனைத்துப் பகுதிகளிலும் ஒளிவு மறைவு இல்லாமல் விற்கிறார்கள். பேக்கரி, டீக்கடை, மளிகை கடை, பியூட்டி பார்லர் என அனைத்துக் கடைகளுக்கு முன்னாடியும் கூவிக் கூவி லாட்டரி விற்கப்படுகிறது.

இந்த ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகள் ஏழை கூலித் தொழிலாளிகளைக் குறிவைத்து விற்கிறார்கள். வியர்வை சிந்தி சம்பாதித்த பணத்தை இந்த மக்கள் லாட்டரி சீட்டு வாங்கியே வாழ்க்கையை வீணடிக்கிறார்கள். ஈரோடு மாவட்டம் வெள்ளோடு போகும் வழியில் நாமக்கல்பாளையத்தில் ஒரு கூலித் தொழிலாளி தற்கொலை முயற்சி எடுத்திருக்கிறார். இதனால் ஏழைகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக இருக்கிறது. அதே போல ஈரோடு பன்னீர்செல்வம் பார்க், மரப்பாலம், பஸ் ஸ்டேண்ட், காளை மாட்டுச் சிலை போன்ற பகுதிகளிலும் பகிரங்கமாக விற்கப்படுகிறது. காவல்துறையினரிடம் சொன்னாலும் கண்டு கொள்வதில்லை. ஈரோடு காவல்துறையினர் கண்டுகொள்வதில்லை. ஈரோடு லாட்டரி மாநகரமாக மாறிவிட்டது.

பெருந்துறை டோல்கேட் முதல் பவானி காவிரி பாலம் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை ஓரமாக உள்ள சர்வீஸ் சாலைகள் கடந்த 10 ஆண்டுகளாக போடப்படாமல் குண்டும் குழியுமாக இருக்கின்றன. பெருந்துறை டோல்கேட்டிலிருந்து காஞ்சிக் கோவில் பிரிவு ரோடு, பெத்தாம் பிரிவு ரோடி, நசியனூர் பிரிவு ரோடு, சித்தோடு பிரிவு ரோடு, பவானி காலிங்கராயன் பிரிவு ரோடு இந்த சர்வீஸ் ரோடுகள் போடப்படாமலேயே இருக்கிறது'' என்றார்.