வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (19/12/2017)

கடைசி தொடர்பு:08:16 (20/12/2017)

'விளக்கம் வேண்டுமானால் கலெக்டரைப் பாருங்கள்'- வி.ஏ.ஓ நோட்டீஸுக்கு எதிராகப் பொங்கிய கிராம மக்கள்

ஈரோடு மாவட்டம் திண்டல் பகுதியில் உள்ள கழிவு நீர் ஓடை அருகே நீர் நிலை புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி இருப்பதாக சொல்லி 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு வி.ஏ.ஓ. நோட்டீஸ் அனுப்பியதை அடுத்து அனைவரும் ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இதுபற்றி திண்டல் 31-வது தி.மு.க. வார்டு செயலாளர் சரவணன், ''ஈரோடு மாவட்டம் திண்டல் பகுதியில் உள்ள பெரியார் நகர், வள்ளியம்மை நகர், காமராஜர் நகர், நல்லியம்பாளையம், பாரதியார் நகர், பாலாஜி கார்டன், கலர் தோட்டம், செக்குபள்ளம் போன்ற பகுதிகளில் மொத்தம் 500க்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கின்றன. இங்கு மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ரெண்டு தலைமுறைகளுக்கு மேல் இந்தப் பகுதியில் வசித்துவருகிறோம். எங்க பகுதியின் ஓரமாகக் கழிவு நீர் ஓடை இருக்கிறது. இந்த ஓடையில் எனக்குத் தெரிந்தவரை தண்ணீர் வந்ததில்லை. இதனால் எங்களுக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை. ஆனால், திண்டல் வி.ஏ.ஒ., எங்க 500 வீடுகளுக்கு நோட்டீஸ் கொடுத்து நீங்கள் அனைவரும் அரசு அனுமதி இல்லாமல் நீர் நிலைப் புறம்போக்கில் வீடுகட்டி இருக்கிறீர்கள். அதனால் நீங்கள் காலி செய்ய வேண்டும். மேற்கொண்டு ஏதாவது விளக்கம் வேண்டும் என்றால் ஈரோடு கலெக்டரை பார்க்கச் சொன்னார்.

அதையடுத்து, ஈரோடு கலெக்டரை பார்த்தோம். அவர் அலுவலர்களை அனுப்பிப் பார்த்துவிட்டு சொல்லுவதாகச் சொல்லுகிறார். நாங்கள் காலங்காலமாக இப்பகுதியில் குடியிருந்து வருகிறோம். எங்களுடைய தொழில், குழந்தைகளின் படிப்பு இந்தப் பகுதியில் இருக்கிறது. அதுவும் அந்தக் கழிவு நீர் ஓடையைத் தாண்டி நாங்கள் குடியிருக்கிறோம். ஆனால், அந்த ஓடையை ஒட்டிய சில வீடுகள் இருக்கிறது. அவர்கள் எப்படியோ பட்டா வாங்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கவில்லை.

ஒரே இடத்தில் ஒரு சிலருக்குப் பட்டாவும், இன்னும் சிலருக்குப் பட்டா இல்லாமலும் இருக்கிறோம். அவர்களைப் பற்றி இந்த அரசாங்கம் பேசவில்லை. ஆனால், எங்களை காலி பண்ணச் சொல்லுகிறார்கள். ஆளுக்கொரு நீதி நல்ல அரசாங்கம். எங்க உயிரே போனாலும் இந்த இடத்தைவிட்டு நாங்கள் காலி செய்ய மாட்டோம். அதனால் அரசு எங்களுக்குப் பட்டா வழங்கி எங்க வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றார்.