வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (19/12/2017)

கடைசி தொடர்பு:08:38 (20/12/2017)

சிறையிலிருந்து விடுதலையாகும் முன்னாள் நீதிபதி கர்ணன்!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மேற்குவங்க சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் நீதிபதி சி.எஸ். கர்ணன், நாளை விடுதலையாகிறார். 


கடலூர் மாவட்டம் கர்ணத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் கர்ணன். சென்னை உயர் நீதிமன்றத்தில் 8 ஆண்டுகள் நீதிபதியாகப் பணியாற்றிய இவரை, கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்து உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்ததோடு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள்குறித்த புகார் கடிதம் ஒன்றையும் பிரதமர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்குக் கர்ணன் அனுப்பிவைத்தார். கர்ணனின் இந்த நடவடிக்கையை அவமதிப்பாகக் கருதிய உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து அவர்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் கர்ணனுக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்த உச்ச நீதிமன்றம், அவரைக் கைது செய்யும்படி மேற்குவங்கக் காவல்துறையினருக்குக் கடந்த மே மாதம் 9-ம் தேதி உத்தரவிட்டது. 

ஆனால், ஒரு மாதத்துக்கும் மேலாக தலைமறைவாக இருந்த கர்ணன், கோவையில் கடந்த ஜூன் 20-ல் மேற்குவங்க போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள பிரசிடென்ஸி சிறைச்சாலையில் அவர் அடைக்கப்பட்டார். தனது சிறைத் தண்டனையை ரத்து செய்யக்கோரி கர்ணன் தாக்கல்செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், ஆறு மாத கால சிறைத் தண்டனை முடிந்து முன்னாள் நீதிபதி கர்ணன், நாளை விடுதலை செய்யப்பட இருக்கிறார். இந்திய நீதித்துறை வரலாற்றிலேயே, உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு, அவரது பதவிக்காலத்தில் நீதிமன்ற அவமதிப்பு தண்டனை வழங்கப்பட்டது இதுவே முதல்முறையாகும்.