வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (19/12/2017)

கடைசி தொடர்பு:23:00 (19/12/2017)

தலைக்கு மேல் உயர் அழுத்த மின்கம்பிகள்! அச்சத்தில் கிராம மக்கள்

ஆபத்துகளை உணர்ந்து வரும்முன் காப்பதுதான் ஓர் அரசுக்கும், ஆட்சியாளருக்கும் அழகு. ஆனால் ஈரோடு மாவட்டம் ஆர்.என்.புதூர் கிராமத்தில் உயர் அழுத்த மின்கம்பிகள் தாழ்வான உயரத்தில் செல்வது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. வீட்டு மாடிமீது நின்று குழந்தைகள் கம்பியில் உரசினால், உயிர் பறிபோகும் சூழ்நிலை இருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளாக இந்த அவலநிலையை எந்த ஓர் அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.  

இதுகுறித்து நம்மிடம் பேசிய காந்திய மக்கள் இயக்கத்தின் ஈரோடு மாவட்டப் பொருளாளர் பாபு ராஜேந்திரன், ''ஈரோடு டு பவானி சாலையில் உள்ள ஆர்.என் புதூர்  கிராம குடியிருப்பிற்கு மேல் கே.கே.எஸ்.கே., லெதர் பேக்டரிக்கு உயர் அழுத்த மின் கம்பிகள் 50 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. காலப்போக்கில் இந்தக் கம்பிகளால் ஆர்.என் புதூர் மக்களுக்கு ஆபத்து என்பதை உணர்ந்து மாற்றுப்பாதையில், அதாவது சூரியம்பாளையம், ஜவுளி நகர்  பொட்டல் காட்டின் வழியாக கே.கே.எஸ்.கே., லெதர் பேக்டரிக்கு உயர் அழுத்த மின்சாரக் கம்பிகள் வழியாக மின்சாரம் சென்றுகொண்டிருக்கிறது.

ஆனால், 50 ஆண்டுகளுக்கு ஆர்.என்.புதூர் ஊருக்கு மேலே மிகவும் தாழ்வாகப் போடப்பட்ட அந்தக் கம்பிகள் அகற்றப்படாமல் அதன் வழியாக இன்று முதல் மின்சாரம் பாய்ந்துகொண்டிருக்கிறது. இந்தக் கம்பிகளுக்குக் கீழே பொதுமக்களின் வீடுகள், வணிக நிறுவனங்களைத் தாண்டி பச்சிளம் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடமும் செயல்பட்டு வருகிறது. மாடி மீது இருந்து குழந்தைகள் நின்றாலே மோதும் அளவுக்கு அந்த மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக இருக்கின்றன. 

பல வீடுகள் உயர் அழுத்தக் கம்பியின்  உயரத்தை விட அதிக உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு நொடியும் பேராபத்தில் தவித்துக் கொண்டிருக்கிறோம். மின்சாரத்துறையிடம் சொன்னால் இந்தக் கம்பிகளை அப்புறப்படுத்த 4 லட்சம் கேட்கிறார்கள். 6 மாதமாக எல்லா அதிகாரிகளையும் சந்தித்து மனு கொடுத்துவிட்டோம். யாரும் கொண்டு கொள்வது போல தெரியவில்லை. ஏதாவது உயர் பலி நிகழ்ந்தால் வருவார்கள் போல தெரிகிறது. இந்த உடனே அகற்றவில்லை என்றால் நாங்கள் அனைவரும் ஊரை காலி செய்து விட்டு கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் அறிவிக்கப் போகிறோம். ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் புகைப்படத்தோடு தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார்கள்'' என்றார்.