இரட்டை இலைச் சின்னத்தில் வென்ற எனக்கே இந்தநிலை என்றால்?... எதைச் சொல்கிறார் கருணாஸ்!

அதிகாரிகள் உடந்தையுடன் மணல் குவாரியில் சட்ட விதிகளுக்குப் புறம்பாக மணல்கொள்ளை நடந்துள்ளதாக திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் புகார் கூறினார். 

திருவாடானை விருசுழி ஆற்றில் ஆய்வு செய்த கருணாஸ்

சட்டத்திற்குப் புறம்பாக மணல் கொள்ளையடிக்கப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து விருசுழி ஆற்றை ஆய்வு செய்யவும், தொகுதி மக்களைச் சந்திப்பதற்காகவும் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் திருவாடானை வந்திருந்தார். விருசுழி ஆற்றைப் பார்வையிட்ட அவர், அந்தப் பகுதியில் ஆய்வும் மேற்கொண்டார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ்  ''விரிசுழி ஆற்றில் தமிழக அரசால் மணல் குவாரி அமைக்கப்பட்டது. இந்தக் குவாரியில் சட்டத்திற்குப் புறம்பாக, விதிகளை மீறி 5 அடிக்கு மேல் மணல் அள்ளப்பட்டுள்ளது. இதனைத் தடுக்க வேண்டிய மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் தடுக்காமல் மணல் கொள்ளைக்குத் துணை போவதாக எனது தொகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், இந்தக் கொள்ளைக்குச் சம்பந்தப்பட்ட அமைச்சரும் துணை போவதாகக் கூறுகிறார்கள். இதனால் தமிழக அரசிற்குத்தான் கெட்ட பெயர் ஏற்படுகிறது. சட்டமன்ற உறுப்பினரான நான், எனது தொகுதியில் ஆய்வுக்கு வரும் நிலையில், என்னுடன் ஓர் அரசு அதிகாரியும் வரவில்லை. நானும் இரட்டை இலைச் சின்னத்தில் நின்று வென்றவன்தானே?. எனக்கே இப்படி என்றால் பொதுமக்களிடம் அதிகாரிகள் எப்படி நடந்துகொள்வார்கள். அதிகாரிகளின், இத்தகைய செயல்பாடு குறித்து முதல்வரிடமும், தலைமைச் செயலாளரிடமும் புகார் செய்ய உள்ளேன்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!