வெளியிடப்பட்ட நேரம்: 03:30 (20/12/2017)

கடைசி தொடர்பு:07:47 (20/12/2017)

மேலிடத்திலிருந்து ப்ரெஷர்: ஈஷாவுக்கு எதிரான கூட்டம் ரத்து

ஈஷாவுக்கு எதிரான ப்ரஸ் மீட்

”ஈஷா யோகா மையம் சார்பாக ஜக்கிவாசுதேவ் நடத்திய ’நதிகளைக் காப்போம்’ திட்டம் உண்மையில் நதிகளைக் காப்பாற்றுவதற்கான திட்டம் இல்லை. அது மக்களிடமிருந்து நிலங்களை பிடுங்குவதற்கான திட்டம். பணம் சம்பாதிப்பதற்கான திட்டம். அதில் என்னுடைய பெயரை என் அனுமதியில்லாமல் பயன்படுத்தி இருக்கிறார்கள்.” என்று கோவையில் கடந்த 17-ம் தேதி அதிரடி பேட்டி கொடுத்தார் இந்தியாவின் தண்ணீர் மனிதர் ராஜேந்தர் சிங். ”வரும் 19-ம் தேதி, கோவையில்  ‘தர்மம் காப்போம்’ என்கிற தலைப்பில் கருத்தரங்கம் ஏற்பாடு செய்துள்ளோம்.  அதில்,  ஈஷாவின் முகத் திரையை கிழிப்போம்” என்று முழங்கியிருந்தார். இந்நிலையில், இன்று நடக்க இருந்த ‘தர்மம் காப்போம்’ நிகழ்வு திடீரென்று ரத்தாகியிருக்கிறது.   

இதுதொடர்பாக,  பழங்குடி பாதுகாப்பு சங்கத் தலைவர் முத்தம்மாள், தி.வி.க தலைவர் கொளத்தூர் மணி, சுற்றுசுழல் ஆர்வலர் பியூஸ் மனுஷ், சூழலியல் செயற்பாட்டாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்டோர் கூட்டாக பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். முதலில்  பேசிய முத்தம்மாள், “ பழங்குடியின மக்களுக்குச் சொந்தமான 44 ஏக்கர் நிலத்தை ஈஷா யோகா மையத்தினர் அபகரித்து வைத்துள்ளனர். அந்த நிலத்தை  மீட்டெடுப்பதற்காக  வெள்ளியங்கிரி  பழங்குடி பாதுகாப்பு சங்கம் உருவாக்கி ஓராண்டு நிறைவடைந்துவிட்டது. அதை முன்னிட்டு்தான்  ’தர்மம் காப்போம்’என்ற நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தோம்.

கோவையில் ஹால் புக் செய்து அட்வான்ஸும் கொடுத்துவிட்டோம். கடைசிநேரத்தில், மேலிடத்திலிருந்து  மிரட்டல் வந்ததால் நிகழ்ச்சியை அந்த அரங்கில் நடத்த வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். வேறு வழி இல்லாமல் கூட்டத்தை  ரத்துசெய்துவிட்டோம். எத்தனை நாள்கள் ஆனாலும், இந்தக் கூட்டத்தை நடத்தியேத் தீருவோம். ஈஷா யோகா மையம் அருகே உள்ள எங்கள் மக்களுக்குச் சொந்தமான 44 ஏக்கர் நிலத்தை யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டோம்.  நிலத்தை மீட்கும்வரை எங்கள் போராட்டாம் ஓயாது” என்றார்.

ஈஷாவுக்கு எதிரான ப்ரஸ் மீட்

அடுத்ததாகப் பேசிய சுற்றுசூழல் ஆர்வலர் பியூஸ் மனுஷ், “சேலத்தில் 9-லட்சம்  மரங்கள் நடப்பட்டுள்ளதாக ஜக்கிவாசுதேவ் தொடர்ந்து பொய்யான தகவலைச் சொல்லி மக்களை ஏமாற்றிவருகிறார். வெள்ளியங்கிரி பகுதியில் 64 லட்சம் மரங்களும், ஈஷா யோகா மையத்தைச் சுற்றி 10 லட்சம் மரங்களும்  நடப்பட்டு இருப்பதாக ஒரு தொலைக்காட்சி பேட்டியில் ஜக்கி வாசுதேவ் தெரிவித்தார். ஆனால், அங்கு  நேரில் போய்ப் பார்த்தால்  அந்த அளவுக்கு  மரங்கள் இல்லை. மக்களையும் மண்ணையும் காப்பாற்ற வேண்டிய தமிழக அரசு ஒரு சாமியாரின் பேச்சைக் கேட்டுக்கொண்டு செயல்படுவது சரியானது அல்ல. சுற்றுச்சுழலை வைத்து  ஜக்கிவாசுதேவ்  மிகப்பெரிய மோசடியை நடத்திக்கொண்டிருக்கிறார். மரங்கள் நடப்பட்டதால்  தமிழகத்தில் 7 சதவிகிதம் இயற்கைவளம் அதிகரித்துள்ளதாகப் பொய் பேசிக்கொண்டு இருக்கின்றார். இதையெல்லாம் மக்களிடம் ஆதாரபூர்வமாக எடுத்துச் சொல்வதற்கே ’தர்மம் காப்போம்’ என்கிற நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால், தலைமைச் செயலாளர் அலுவலகத்தில் இருந்து நெருக்கடி கொடுத்து இந்த நிகழ்வை ரத்துசெய்ய வைத்துள்ளார்கள். ரத்தான கூட்டத்தை சென்னையில் பிரமாண்டமாக நடத்திக் காட்டுவோம். ஈஷாவின் முகத்திரையை கிழிப்போம்” என்றார்.

அடுத்ததாகப் பேசிய பேராசிரியர் ஜெயராமன், “ஈஷா யோகா மையம்  நிலங்களை  ஆக்கிரமித்துள்ளதாகத்  தமிழக அரசே நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருக்கிறது.  நிலங்களை ஆக்கிரமிக்க  உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகள்மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று இதுவரை தெரியவில்லை. ஒரு சாமியாருக்கு எதற்கு இவ்வளவு சொத்துகள்?  ஜக்கி வாசுதேவ் ஒரு ஆன்மிக தொழிலதிபர். 5 லட்சத்து அறுபதாயிரம் கோடி ரூபாய் பட்ஜெட் கொண்ட நதிகள் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்துவதற்காகவே  ஜக்கிவாசுதேவ் 'நதிகளை மீட்போம்' நெடும்பயணம் தொடங்கி இருக்கிறார்.

15 ஆண்டுகள்கழித்து இந்தத் திட்டத்தை செயல்படுத்தினாலும்  இதற்கு ஆகும்  87 கோடி பில்லியன் டாலரை  யார்  முதலீடு செய்வார்கள் என்ற கேள்வி எழுகிறது. நதிகளைக் காக்கும் பயணம் அதானி உள்ளிட்டப் பெருமுதலாளிகளின் உதவியோடுதான் நடந்திருக்கிறது. ஆறுகளை இணைத்து அதன்மூலம் ஆற்று தண்ணீரை வியாபார பண்டமாக மாற்ற முயற்சிக்கின்றனர். அதற்கு  ஜக்கிவாசுதேவ் என்கிற சாமியாரை பயன்படுத்திக்கொள்கின்றனர். ஏனென்றால், சாமியார் சொன்னால்தான் மக்கள் நம்புவார்கள் என்பது கார்பரேட் கம்பனிகளுக்கு நன்றாகத் தெரியும். எனவே, இவர்களின் நதி இணைப்புத் திட்டத்துக்கு எதிராக மக்கள் உடனடியாக களம் இறங்க வேண்டும்” என்று எச்சரித்தார்.