வெளியிடப்பட்ட நேரம்: 11:41 (20/12/2017)

கடைசி தொடர்பு:11:41 (20/12/2017)

ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ வெளியானதன் பின்னணி!

ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளார் தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல். 

ஜெயலலிதா மரணம்குறித்து  நீதிபதி ஆறுமுகசாமி  தலைமையில் விசாரணை ஆணையத்தை அ.தி.மு.க அரசு அமைத்தபோதே, ''ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வீடியோ எங்களிடம் உள்ளது. தேவைப்படும்போது அதை நாங்கள் வெளியிடுவோம்'' என்று தினகரன் தரப்பு சொல்லிவந்தது. அதேபோல், ஜெயலலிதா மரணம் அடைந்து இரண்டு மாதங்கள் கழிந்த நிலையில் திவாகரன் மகன் ஜெயானந்த், ''ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ எங்களிடம் இருக்கிறது. அதை வெளியிட வேண்டிய அவசியம் இப்போது இல்லை'' என்று தெரிவித்திருந்தார். 

ஜெயலலிதா சிகிச்சை பெறும் அறையின் உள்ளே இருந்த சசிகலா, தனது செல்போனில் ஜெயலலிதாவை வீடியோ எடுத்திருந்தார் என்ற செய்தியை மட்டும் சசிகலா குடும்பத்தினர் ஊர்ஜிதமாகச் சொல்லிவந்தனர். இந்நிலையில், ஆறுமுகசாமியின் விசாரணை ஆணையத்தில்  ஆஜராகியவர்கள், முன்னுக்குப் பின் முரணாகப் பல கருத்துகளைப் பதிவு செய்துவந்தனர். அதேபோல், ஜெயலலிதாவுக்கு மகள் இருப்பதாகவும் செய்திகள் வெளியாயின.  இந்த நிலையில்தான்  சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் ஜெயராமன் நேற்று திடீர் என அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில், “ஜெயலலிதாவின் புகழுக்குக் களங்கம் விளைவிப்பவர்கள்மீது சட்டபடி நடவடிக்கை  எடுக்கப்படும் என்றும், அவர் செல்வி ஜெயலலிதாவாகதான் மரணம் எய்தும்வரை இருந்தார் என்றும், அவரால்  வளர்க்கப்பட்டவன் நான் என்பதால், இனியும் இதுபோன்ற அவதூறுகளைப் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது” என்றும் அதில் கடுமையாகத் தெரிவித்திருந்தார். 

சசிகலா, அப்போலோ மருத்துவமனையில் எடுத்த வீடியோ விவேக் ஜெயராமன் வசம் இருந்ததாகக் கூறப்பட்டு வந்த நிலையில், அவர் திடீர் என வெளியிட்ட இந்த அறிக்கை பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது. அதன்பிறகுதான், வீடியோ வெளியிடும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விவேக் ஜெயராமனிடம் இருந்தே இந்த வீடியோ தினகரன் தரப்புக்குச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. 

தினகரன், ஆர்.கே.நகர் தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு நெருக்கடி கொடுக்கும் முடிவில் இந்த வீடியோவை இன்று தலைமைச் செயலகத்தில் வைத்து தனது ஆதரவாளர் வெற்றிவேல் மூலம் வெளியிட்டுள்ளார். ஆனால், இந்த வீடியோ அப்போலோ மருத்துவனையில்தான் எடுக்கபட்டதா என்ற சந்தேகத்தையும் அ.தி.மு.க தரப்பில் கிளப்பியுள்ளார்கள். இதேபோல், ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மேலும் சில வீடியோக்களும் சசிகலா வசம் இருப்பதாகவும், அதையும் அடுத்தடுத்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தும் திட்டத்தில் தினகரன் தரப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.