'டிரஸ் எப்படியிருக்குமா?'னு பையன் கேட்கிறப்போ... பதறிடுவோம்!" பார்வையில்லா தம்பதியின் நெகிழ்ச்சிக் கதை | The inspiring story of visually challenged couple

வெளியிடப்பட்ட நேரம்: 13:07 (20/12/2017)

கடைசி தொடர்பு:16:31 (22/12/2017)

'டிரஸ் எப்படியிருக்குமா?'னு பையன் கேட்கிறப்போ... பதறிடுவோம்!" பார்வையில்லா தம்பதியின் நெகிழ்ச்சிக் கதை

தம்பதி

"பார்வைத்திறனிழந்த மாற்றுத்திறனாளி தம்பதியான எங்களாலயும் சமூகத்துக்குப் பயன்படுற மாதிரி செயல்பட முடியும். வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிக்க முடியும். அதன்படி சவாலான வாழ்க்கையிலும் திட்டமிட்டு சிறப்பா பயணிக்கிறோம்" - ஞானசுந்தரின் வார்த்தைகளில் தன்னம்பிக்கை உணர்வுப் பூர்வமாக வெளிப்படுகிறது. சென்னையை அடுத்த செங்கல்பட்டில் வசித்துவரும் நாகராஜன் - ஞானசுந்தரி தம்பதி, பிறக்கும்போதே பார்வைத்திறனை இழந்தவர்கள். அடுத்தடுத்து பல கஷ்டங்களை எதிர்கொண்டாலும்,  இன்முகத்துடனே வாழ்க்கையை கழிக்கிறார்கள். அதன் மூலம் மற்றவர்களுக்கு தன்னம்பிக்கையும் ஊட்டுகிறார்கள். 

"பிறந்தது திண்டிவனம் பக்கத்துல பேராவூர் கிராமம். பிறக்கிறப்போவே பார்வைத்திறனை இழந்தாலும், அதை ஒரு குறையா நினைக்காம வாழப் பழகிட்டேன். தொடர்ந்து சென்னைக்குவந்து, பார்வையற்றோருக்கான ஒரு ஸ்கூல்ல ப்ளஸ் டூ வரை படிச்சேன். அங்கேயே டைப் ரைட்டிங் கோர்ஸூம் முடிச்சுட்டு, ராணி மேரி காலேஜ்ல ரெகுலர்ல பி.ஏ., படிச்சேன். பிறந்தது முதலே பல ரூபங்கள்லயும் போராட்டமான வாழ்கைதான். ஆனா, நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குதுனு ஒருநாளும் நினைக்கலை. எது நடந்தாலும் அது நன்மைக்காகதான் இருக்கும்னு நினைச்சுட்டு, அடுத்த செயல்பாட்டைச் சிறப்பா செய்றதுக்கான வேலையில மட்டும்தான் கவனம் செலுத்துவேன். அப்படிதான் ஆக்ஸிடென்ட் சம்பவத்தையும் கடந்தேன்" என்று தனக்கு ஏற்பட்ட சாலை விபத்து நிகழ்வு குறித்துப் பேசுகிறார், ஞானசுந்தரி.

"பி.எட்., படிச்சுக்கிட்டிருந்த சமயம். என் படிப்புக்கான லோன் வாங்கும் விஷயமா பேங்குக்குப் போனேன். வர்ற வழியில திடீர்னு ஒரு வண்டி எங்க மேல மோதினதுல நான் தூக்கிவீசப்பட்டேன். வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு அபாயகட்டத்துலேருந்த நான், பின்னர் சிகிச்சைக்காக பல ஹாஸ்பிட்டலுக்கு மாற்றப்பட்டேன். கிட்டத்தட்ட நாலு மாசத்துக்குப் பிறகுதான் வீட்டுக்கே வந்தேன். ரொம்பவே ரணமான சூழல் அது. அடுத்த ஒரு வருஷம் ரெஸ்டுலயே இருக்க வேண்டியதா போச்சு. இனியும் வாழ்க்கையிருக்குது. அது படிப்பினால்தான் கிடைக்கும்ங்கிறதை உணர்ந்தேன். உடனே ரெகுலர்ல பி.எட்., முடிச்சேன்" என்பவருக்கு, 2012-ம் ஆண்டு திருமணம் நடந்திருக்கிறது. 

தம்பதி

"எதிர்பாராத ஒரு கனவு மாதிரி அவ்விபத்து முடிஞ்சுடுச்சு. 'உனக்கு அழகான மணவாழ்க்கை அமையும்'னு சொன்ன பெற்றோர் அதுக்கான முயற்சிகளை செய்தாங்க. அதன்படி என்னைப்போல கண்பார்வைத்திறனை இழந்த நாகராஜன் வாழ்க்கைத் துணையானார். அவர் செங்கல்பட்டிலிருக்கிற ஓர் ஆர்ட்ஸ் காலேஜ்ல வரலாறுத் துறை உதவிப் பேராசிரியரா வொர்க் பண்றாரு. 2014-ல் பையன் மதன் பிறந்தான். இடையே வீட்டில் இருந்தபடியே எம்.ஏ., முடிச்சேன்" என்பவர் சற்றே அமைதியாகிறார். தொடர்ந்து நம் கேள்விகளுக்கு இன்முகத்துடன் பதிலளிக்கிறார். 

"தம்பதிகள் ஒருவருக்கொருவர் எப்படி உறுதுணையா இருக்கீங்க?"

"நிச்சயமா உன்னால சிறப்பா செயல்பட முடியும்'னு கணவர் என்னை ஊக்கப்படுத்திட்டேயிருப்பார். அதனாலதான் நிறைய கஷ்டச் சூழலை மறந்து, படிப்பில் கவனம் செலுத்தினேன். அவருக்கு எல்லா வகையிலயும் என் சிறப்பான பங்களைப்பையும் அன்பையும் கொடுக்கிறேன்."

"விபத்தின் தாக்கம் முழுமையாக குணமாகிவிட்டதா?"

"விபத்து பிரச்னைக்குப் பிறகு உடல்நிலை குணமாகிட்டாலும், இன்னும் அத்தாக்கம் இருந்துட்டேதான் இருக்குது. ரொம்பவே இயல்பா நடக்க முடியாது. சிரமப்பட்டு, கொஞ்சம் தடுமாறித்தான் நடப்பேன். அடுத்தடுத்த சவால்கள் எல்லாமே, இன்னும் தன்னம்பிக்கையோடு செயல்படணும்ங்கிற உத்வேகத்தைதான் கொடுக்குது." 

தம்பதி

"பையனை பார்க்க முடியாத கவலை இருக்கிறதா?"

"எங்கப் பையன் மதனுக்கு மூன்றரை வயசாகுது. ரொம்பவே அன்பான, க்யூட்டான குழந்தை. சீக்கிரமே அவனை ஸ்கூல்ல சேர்க்கப்போறோம். அவன்தான் எங்க வாழ்க்கைக்கான அடையாளம். அவனோட அன்பினால்தான் எங்க கஷ்டங்களையும் வலிகளையும் மறக்கிறோம். எப்படியெல்லாம் இருக்கணும்னு நான் கற்பனை செஞ்சிருந்தேனோ, அப்படியான குழந்தையே எங்களுக்குக் கிடைச்சிருக்கேன். அதை என் அம்மாவும், தம்பிகளும் சொல்லக் கேட்டு ரொம்பவே பூரிச்சுப்போனேன். நானும் என் கைகளால அவனை அடிக்கடி வருடிப்பார்த்து, மகிழ்ச்சியையும் அவனோட வளர்ச்சியையும் உணர்வேன். எவ்விதக் குறைகளும் இல்லாத அம்சமான குழந்தை. தனக்குப் பிடிச்ச டிரஸ்ஸைப் போட்டுகிட்டு, 'எப்படியிருக்குது?'னு எங்கிட்டயும் கணவர்கிட்டயும் பையன் அடிக்கடி கேட்பான். 'சூப்பர்! உனக்குன்னே தைச்ச மாதிரி இருக்குது செல்லம்'னு சொல்லுவோம். அவனும் சந்தோஷமா சிரிச்சுட்டுப்போயிடுவான். ஆனா, 'பையனை கண்கூடப் பார்க்க முடியலையே! ஒருவேளை பார்வைத்திறன் இருந்திருந்தால், எதாச்சும் குறைகள் இருந்தாலும் சொல்லி பையனை திருப்திபடுத்தலாமே'னு மனசு பதறும். அதோட அவனை நேர்ல பார்க்க முடியாத ஆதங்கம் வேற தினமும்."

"எதிர்காலப் பயணத்தை எப்படி திட்டமிட்டிருக்கீங்க?"

"கவர்ன்மென்ட் ஸ்கூல் டீச்சராகணும் என்பதுதான் என் கனவு. இப்போ அதுக்காக படிச்சுகிட்டே, எக்ஸாம் எழுதிட்டிருக்கேன். நிச்சயம் சீக்கிரமே டீச்சராகிடுவேன். எங்கள மாதிரியான பார்வைத்திறனை இழந்தவங்களால ஆசிரியரா சிறப்பான பங்களிப்பைக் கொடுக்க முடியும். அப்படி கணவரை மாதிரி நானும் டீச்சராகி கல்வி சேவை கொடுப்பேன். பார்வைத்திறனில்லாட்டியும் என்னால பல வகையிலயும் சிறப்பா செயல்பட முடியும். மத்தவங்க துணையில்லாமலேயே ரொம்பவே சிறப்பா சமைப்பேன். அம்மாவும் தம்பியும் எங்களுக்கு சப்போர்டிவா இருக்காங்க."


டிரெண்டிங் @ விகடன்