சிகிச்சை வீடியோ எழுப்பும் சந்தேகங்கள்... பதில் சொல்ல வேண்டியது அரசும் அப்போலோவும்தான் | This raises questions and more questions... EPS, OPS, Apollo have to answer

வெளியிடப்பட்ட நேரம்: 11:59 (20/12/2017)

கடைசி தொடர்பு:13:11 (20/12/2017)

சிகிச்சை வீடியோ எழுப்பும் சந்தேகங்கள்... பதில் சொல்ல வேண்டியது அரசும் அப்போலோவும்தான்

ஜெயலலிதா

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திவரும் நிலையில், இந்த வீடியோ பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆபத்தான நிலையில்தான் அப்போலோ மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார் என்றும் சட்டம், ஒழுங்கு பிரச்னையை தவிர்க்கவே அவருக்குக் காய்ச்சல் என்று அறிவிப்பு செய்யப்பட்டது என்றும் அப்போலோ மருத்துவமனை குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டி அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார். ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக எழுந்த புகாரின் பேரில் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்திவரும் வேளையில் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ள இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. 

ஏற்கெனவே, "ஜெயலலிதாவை யாரும் சந்திக்கவில்லை. அவரை நேரில் பார்த்தது. அவர் உணவு உட்கொண்டதாகச் சொன்னது எல்லாமே பொய்" என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்திருந்தார். ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ச்சியாகப் பேசி வருகிறார்.

இந்தச் சூழலில் தற்போது ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த வீடியோவை டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டிருக்கிறார். ஜெயலலிதாவை மருத்துவமனையில் யாரும் சந்திக்கவில்லை என்பது பொய் என்றும், அதற்கான ஆதாரம் தான் இந்த வீடியோ ஆதாரம் என்றும் தெரிவித்திருக்கிறார் வெற்றிவேல்.

வெற்றிவேல்

இந்நிலையில், ஜெயலலிதா சிகிச்சை பெற்ற விவகாரத்தில் பல கேள்விகள் தற்போது எழுந்துள்ளன. "இந்த வீடியோ உண்மையானது தானா, வீடியோவில் உள்ள காட்சிகள் அப்போலோ மருத்துவமனையில் பதிவு செய்யப்பட்டவை தானா, ஜெயலலிதாவின் உடல் நலன் மற்றும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பற்றி வெளியிடப்பட்ட விவரங்கள் உண்மையானவையா, பிரதாப் ரெட்டி சில தினங்களுக்கு முன்னர் அறிவித்த தகவல்கள் உண்மையானவையா, யாரையும் அனுமதிக்கவில்லை என தெரிவித்திருந்த நிலையில், இந்த வீடியோவை எடுத்தது யார்?" இப்படி பல கேள்விகள் எழுந்திருக்கிறது. 

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆபத்தான நிலையில்தான் அப்போலோ மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார் என்றும் சட்டம், ஒழுங்கு பிரச்னையை தவிர்க்கவே அவருக்கு காய்ச்சல் என்று அறிவிப்பு செய்யப்பட்டது என்றும் பிரதாப் ரெட்டி சொன்னது தொடர்பாக தமிழக அரசு தரப்பில் எந்தப் பதிலும் தெரிவிக்கப்படவில்லை. சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ஜெயலலிதாவின் உடல்நலன், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி வெளியிடப்பட்ட விவரங்கள் அனைத்தும் உண்மையான தகவல்கள் என்று கூறினர். ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் மருத்துவர்களும் இதுதொடர்பாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், இந்த வீடியோ என்பது இந்த அமைச்சர்கள் மற்றும் அப்போலோ நிர்வாகத்தின் குற்றச்சாட்டு மீதான பதிலாகவே சொல்லப்படுகிறது.

"சிசிடிவி எதுவும் இல்லை; வீடியோ எதுவும் பதிவு செய்யவில்லை; வீடியோ பதிவு செய்வது மற்றும் அதை வெளியிடுவது என்பது சட்டரீதியாக சரியானது இல்லை; போட்டோவே வெளியிட முடியாது" என சிகிச்சைகுறித்த கேள்விகளுக்கு கடந்த ஓராண்டாக பதில் சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது வீடியோ வெளியாகியிருப்பது இன்னும் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. ஆர்.கே.நகர் தேர்தல் நாளை நடக்கவிருக்கிற நிலையில், இந்த வீடியோ ஏன் இப்போது வெளியானது என்பது பெரும் கேள்வியை முன்னெடுக்கிறது.

உண்மையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற 75 நாள்களில் நடந்தது என்ன, அப்போலோ வெளியிட்ட அறிக்கைகள் உண்மையானவை தானா என்ற சந்தேகங்கள் அதிகரித்துள்ளன. இப்போது பதில் சொல்ல வேண்டியது முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், அப்போலோ தலைவர் பிரதாப் ரெட்டியும் தான்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க