'ஜெயலலிதா அம்மாவை இந்தக் கோலத்தில் காட்டி ஜெயிக்க வேண்டுமா?!' - தினகரன் தரப்பிடம் வெடித்த விவேக் #Jayalalithaa #VikatanExclusive

ஜெயலலிதா சிகிச்சை வீடியோ

ப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா பழச்சாறு அருந்தும் காட்சிகளை வெளியிட்டிருக்கிறார் தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல். ' விவேக்கிடம் சசிகலா ஒப்படைத்த வீடியோக்கள் எப்படிக் கசிந்தன எனக் குடும்ப உறவுகள் கொதிக்கின்றனர். இந்த வீடியோ காட்சிகளை ஜெயா டி.வியில் ஒளிபரப்பப்படவில்லை. வெளிமாநிலத்தில் இருக்கும் விவேக், வீடியோ வெளியானதைப் பார்த்து கொதித்துப் போய்க் கிடக்கிறார்' என்கின்றனர் ஜெயா டி.வி நிர்வாகிகள். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, முன்னாள் நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தை அமைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்த விசாரணை ஆணையத்தில் அரசு மருத்துவர்கள், அதிகாரிகள், முன்னாள் அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்பட பலரும் ஆஜராகி வருகின்றனர். நாளை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில் இப்படியொரு வீடியோ வெளியாகியிருப்பதை அதிர்ச்சியோடு கவனிக்கின்றனர் எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர். ஆனால், இந்த வீடியோ காட்சிகளால் சசிகலா குடும்பத்துக்குள் பெரும் பூகம்பமே வெடித்துக்கொண்டிருக்கிறது. இன்று காலை இந்த வீடியோவை வெற்றிவேல் வெளியிட்ட நேரத்தில் வெளிமாநிலத்தில் இருந்தார் விவேக். உடனே தினகரன் தரப்பைத் தொடர்பு கொண்டவர், ' யாரைக் கேட்டு இந்த வீடியோவை வெளியிட்டீர்கள்? மிக ரகசியமாக இந்த வீடியோக்களைக் கொடுத்துவிட்டுச் சென்றார் சின்னம்மா. அவருடைய அனுமதியில்லாமல் இந்த வீடியோவை வெளியிட்டுவிட்டீர்கள். ஒரு சாதாரண தேர்தல் வெற்றிக்காக, இப்படியொரு கோலத்தில் அம்மா இருக்கும் காட்சிகளை வெளியிடலாமா? இத்தனை மாதங்களாகப் பாதுகாத்து வைத்த ரகசியத்தை எப்படி வெளியிடலாம். வெற்றிவேல் மீது மட்டுமல்ல, தினகரன் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப் போகிறார் சின்னம்மா. இப்படி வெளியிட்டு நாம் நல்லபெயரை வாங்க வேண்டிய அவசியம் இல்லை' எனக் கதறி அழுதபடியே கொதிப்பைக் காட்டியிருக்கிறார். 

விவேக் ஜெயராமன்" வீடியோ காட்சிகளைப் பார்த்து விவேக் கதறியழுததற்கும் ஒரு காரணம் இருக்கிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்குச் சென்றபோது, இந்த வீடியோ காட்சிகளை தினகரனிடம் கொடுக்காமல் விவேக்கிடம் கொடுத்தார். அப்போது, ' இந்த வீடியோக்களைப் பத்திரமா பார்த்துக்கப்பா. எந்தச் சூழலிலும் இந்தக் காட்சிகள் வெளியாகக் கூடாது' எனக் கண்டிப்பான குரலில் உத்தரவிட்டே சிறைக்குச் சென்றார். இதன்பிறகு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்பில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார் ம.நடராசன். கணவரைப் பார்ப்பதற்காக சசிகலாவுக்குப் பரோல் கொடுத்தது பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகம். தி.நகரில் உள்ள கிருஷ்ணபிரியா வீட்டில் தங்கியிருந்தபடியே உறவுகளைச் சந்தித்து வந்தார். அப்போது அவரிடம் பேசிய மன்னார்குடி உறவினர் ஒருவர், ' அம்மா மரணத்தில் நமது குடும்பத்தின் மீதுதான் அவதூறு பரப்புகிறார்கள். சிகிச்சை வீடியோவில் எதாவது ஒன்றை வெளியிடுங்கள்' எனக் கூற,

தினகரன்இதற்கு மறுப்பு தெரிவித்துப் பேசிய சசிகலா, ' அதிகபட்சம் என்னைக் கொலைகாரி என்பார்கள். சொல்லிவிட்டுப் போகட்டும். இப்படியொரு கோலத்தில் அம்மா இருக்கும் காட்சியை வெளியிட நான் சம்மதிக்க மாட்டேன்' எனக் கூறியிருக்கிறார். இதன்பிறகும் அந்த உறவினர், ' நம் மீதுள்ள சந்தேகங்களைப் போக்குவதற்கும் நம்மைப் பற்றி புரிய வைப்பதற்கும் ஒரு வாய்ப்பாக அமையும். தயவு செய்து வீடியோவைக் கொடுங்கள்' எனக் கூற, ' இனி இதைப் பற்றி நீங்கள் பேசினால், எழுந்து வெளியே போகலாம்' எனக் கண்டிப்புடன் கூறிவிட்டார். இவ்வளவு உறுதியாக சசிகலா இருக்கும்போது, இந்தக் காட்சிகள் வெளியாக அவர் சம்மதிக்க வாய்ப்பே இல்லை. ஆர்.கே.நகர் தேர்தல் வெற்றிக்காக இந்தக் காட்சிகளை வெளியிட்டிருக்கிறார் தினகரன் எனக் கொதிப்பில் இருக்கிறார் விவேக்" என விவரித்த மன்னார்குடி உறவினர் ஒருவர், 

" சசிகலா குடும்பத்திலிருந்து தான் மட்டுமே கோலோச்ச வேண்டும் என்ற மனநிலையில் இருக்கிறார் தினகரன். போயஸ் கார்டனுக்குள் வருமான வரித்துறை அதிகாரிகள் வந்தபோது, பத்திரிகையாளர்களிடம் பேசினார் விவேக். இதனை தினகரன் ரசிக்கவில்லை. இதைப் பற்றி சசிகலாவிடம் பேசும்போது, ' ஆளாளுக்கு பேட்டி கொடுக்கிறார்கள். இதனால் தேவையற்ற குழப்பம் ஏற்படும். நிதிப் பிரச்னை அதிகமாக இருக்கிறது. ஒவ்வொரு விஷயத்துக்கும் விவேக்கிடம் சென்று கேட்க வேண்டியிருக்கிறது. தயவு செய்து நிதியைக் கையாளும் பொறுப்பை என்னிடம் கொடுங்கள்' எனக் கேட்டார். இதற்கு சசிகலா எந்தப் பதிலையும் சொல்லவில்லை.

சசிகலா உத்தரவுகளை மீறித்தான் தினகரன் செயல்பட்டு வருகிறார் என்பதற்கு இந்த வீடியோ காட்சிகள் உதாரணம். நேற்று மாலை விவேக்கிடமிருந்து மீடியாக்களுக்கு அறிக்கை ஒன்று சென்றது. அதில், ஜெயலலிதா புகழுக்குக் களங்கம் விளைவிக்க நினைப்பவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்' எனக் கொந்தளித்திருந்தார். இந்த நிலையில், இப்படியொரு வீடியோ வெளியானதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தன்னுடைய பாதுகாப்பில் இருந்த வீடியோ எப்படி வெளியானது என அதிர்ச்சியில் இருக்கிறார். வீடியோ வெளியான தகவலை பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார் விவேக். இதன் எதிரொலியாக தினகரன் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் ஆச்சர்யமில்லை" என்கிறார் போயஸ் கார்டன் நிர்வாகி ஒருவர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!