வெளியிடப்பட்ட நேரம்: 13:51 (20/12/2017)

கடைசி தொடர்பு:13:51 (20/12/2017)

சிறையிலிருந்து வெளியே வந்தார் கர்ணன்!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆறு மாத காலமாக சிறையில் இருந்த முன்னாள் நீதிபதி கர்ணன் இன்று விடுதலையானார்.

கர்ணன்

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிகளால், ‘நீதிமன்ற அவமதிப்பு’ வழக்கில் தண்டனை பெற்று தலைமறைவாக இருந்தவர் நீதிபதி கர்ணன். தமிழகத்தைச் சேர்ந்த இவர், கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவி வகித்துவந்தார். சில மாதங்களுக்கு முன்னர், தன் சக நீதிபதிகள்மீது ஊழல் புகார் தெரிவித்திருந்தார். இதையொட்டி, உச்ச நீதிமன்றமே தாமாக முன்வந்து கர்ணன்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தது. இறுதியாக நீதிபதி கர்ணன்மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கே தண்டனை விதித்த கர்ணன்மீது அடுக்கடுக்கான வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதையொட்டி, உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த கர்ணன், தன் பதவிக்காலத்திலேயே தலைமறைவானார். சுமார் ஒரு மாத காலத்துக்கும் மேலாக தலைமறைவாக வாழ்ந்து வந்த கர்ணன் கோவையில் கைதுசெய்யப்பட்டு கொல்கத்தா பிரெசிடென்ஸி சிறையில் சிறைவைக்கப்பட்டிருந்தார். ஆறு மாத காலத்துக்குப் பின் இன்று தண்டனைக் காலம் நிறைவடைந்து முன்னாள் நீதிபதி கர்ணன் வெளியே வந்தார்.