வெளியிடப்பட்ட நேரம்: 14:31 (20/12/2017)

கடைசி தொடர்பு:18:43 (20/12/2017)

ஜெயலலிதா சிகிச்சை வீடியோவில் 10 சந்தேகங்கள்! - விவரிக்கும் சைபர் சேஃப்டி நிறுவன இயக்குநர்

சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிசிக்சைப்பெற்ற ஜெயலலிதா, கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி இறந்தார். அவர் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாகத் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முதல் பலர் குற்றம் சாட்டினர். இதையடுத்து, ஜெயலலிதா மரணத்தை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. விசாரணை கமிஷனின் விசாரணை நடந்துவரும் நேரத்தில், ஆர்.கே.நகர் பிரசாரம் நிறைவுற்ற நேரத்தில், தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் எம்.எல்.ஏ, ஜெயலலிதா சிகிச்சைபெறும் வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அந்த வீடியோவில் சந்தேகங்கள் இருப்பதாக, நேஷனல் சைபர் சேஃப்டி அண்டு செக்யூரிட்டி ஸ்டாண்டர்டு என்ற தனியார் நிறுவனத்தின் கூடுதல் பொது இயக்குநர் அமர்பிரசாத் ரெட்டி தெரிவித்துள்ளார். 
"முதல்வராக இருந்த ஜெயலலிதா, சிகிச்சைபெறும் வீடியோவை வெற்றிவேல் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவைப் பார்க்கும்போது சில சந்தேங்கள் எழுகின்றன. 
 1.  ஜெயலலிதா, பெட்டில் படுத்தவாறே இடது கையால் ஜூஸ் குடிக்கிறார். முதல்வராக இருந்த ஜெயலலிதாவை வீடியோ எடுத்தவர்கள் ஏன் அவரது உடையைச் சரிசெய்யவில்லை? 
 2. இந்த வீடியோ, ஜெயலலிதாவுக்குத் தெரிந்து எடுக்கப்பட்டதா அல்லது தெரியாமல் எடுக்கப்பட்டதா என்பதை வீடியோ எடுத்தவர்கள் முதலில் தெரிவிக்க வேண்டும். ஆனால், வீடியோவைப் பார்க்கும்போது ஜெயலலிதாவுக்குத் தெரியாமல்  எடுத்திருக்க வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. 
3. எந்த கேமரா மூலம் வீடியோ எடுக்கப்பட்டது. ரகசிய கேமரா மூலம் அந்த வீடியோ எடுத்ததற்கான வாய்ப்புகள் குறைவு. செல்போன் கேமரா மூலம்தான் அந்த வீடியோ எடுக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும், அந்த வீடியோ ஜூம் செய்து எடுக்கப்பட்டுள்ளது. அதைத் தடய அறிவியல் துறையினர்  ஆய்வுசெய்தால், வீடியோவின் உண்மைத்தன்மையைக் கண்டறிந்துவிடலாம். 

4. வீடியோவில் ஜெயலலிதா எதையோ (டி.வி பார்த்திருக்க வாய்ப்பு உள்ளது) பார்த்தபடி ஜூஸ் குடிக்கிறார். இதனால், அவர் வீடியோ எடுத்தவர்களைக் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கலாம். இருப்பினும் வீடியோவில் அவரின் கை அசைவு, உதடுகள் அசைவு ஆகியவற்றை உற்றுநோக்கினால் சில வித்தியாசங்களைப் பார்க்க முடிகிறது. 
5. ஜெயலலிதாவின் இடதுகையில் சில மாற்றங்கள் இருக்கின்றன. வீடியோவை ஆய்வுசெய்தால் அதைக் கண்டறியலாம். 

6. வீடியோ எடுக்கப்பட்ட கேமரா அல்லது செல்போனை தடய அறிவியல் துறையினரிடம் சம்பந்தப்பட்டவர்கள் ஒப்படைக்க வேண்டும். அப்போதுதான் வீடியோவின் உண்மைத் தன்மையை எளிதில் கண்டறிய முடியும். 
 7. ஜெயலலிதாவின் வீடியோ எந்தத் தேதியில், எந்த நேரத்தில், எவ்வளவு நேரம் எடுக்கப்பட்டது என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்க வேண்டும். 
8. ஒரிஜினல் வீடியோவை சமர்பிக்கப்பட்டால், அதை ஆய்வுசெய்து வீடியோ குறித்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். 
9. வீடியோ எடுக்கப்பட்டிருக்கும் இடம் ஒரு மருத்துவமனை தான் என்பதை உறுதி செய்யும் வகையில், அருகில் இருக்கும் கட்டில் உணர்த்துகிறது. 
10. வெற்றிவேல் வெளியிட்ட வீடியோ எடிட் செய்யப்பட்டுள்ளது. வீடியோவை நன்றாகக் கவனித்தால், ஒரு சினிமா பாடலின் ஹம்மிங் சத்தம் கேட்கிறது. இந்தச் சத்தம், டி.வி-யிலிருந்து வந்திருக்க வாய்ப்புள்ளது. வீடியோவின் தொடக்கத்தில் கேட்கும் பாடல், அதன்பிறகு கேட்கவில்லை. எனவே, தற்போது வெளியான வீடியோ எடிட் செய்யப்பட்டுள்ளதை உறுதியாகச் சொல்ல முடியும்.  


டிரெண்டிங் @ விகடன்