ஜெயலலிதா சிகிச்சை வீடியோ! - முக்கியக் கேள்வியெழுப்பும் ஜெயக்குமார்

ஜெயலலிதா அப்போலோவில் சிகிச்சை பெற்றபோது எடுத்த வீடியோவை டி.டி.வி.தினகரன் தரப்பு இன்று காலை வெளியிட்டது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் வீடியோ வெளியிட்டது தேர்தல் விதிமீறும் செயல் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

jayakumar

 

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதால் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஜெ. மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரித்து வருகிறார். இந்தச் சூழலில் எங்கள் காவல்தெய்வமாக இருக்கின்ற ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது எடுத்த வீடியோவை வெற்றிவேல் ஊடகத்துக்கு வெளியிட்டிருக்கிறார். இது ஆர்.கே.நகர் தேர்தலைக் குறிவைத்து அரங்கேறிய நாடகம். இது உள்நோக்கத்தோடு வெளியிடப்பட்ட வீடியோ. இது ஜெயலலிதாவின் புகழை சீர்குலைக்கும் செயல். விசாரணை ஆணையம் அரசு அமைத்துவிட்ட பின்பு ஜெ. சிகிச்சை பெறும் வீடியோவை விசாரணை ஆணையத்தில்தான் சமர்பிக்க வேண்டும். ஜெயலலிதா Z+ பாதுகாப்பில் இருந்தவர்.  அப்படியிருக்கையில் ஜெயலலிதா இருக்கும் வார்டுக்குள் சென்று பாதுகாப்பு விதிகளை மீறி யார் இந்த வீடியோவை எடுத்தது. இந்த வீடியோ எப்போது எடுத்தது என்பதையும் குறிப்பிடவில்லை. கடந்த ஓராண்டாக இந்த வீடியோவை வெளியிடாமல் இப்போது ஏன் இதை வெளியிட வேண்டும்” என்று கேள்வியெழுப்பியுள்ளார். 

”அ.தி.மு.க பொதுச் செயலாளராகவும் முதல்வராகவும் இருந்தவர் ஜெயலலிதா. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதற்கான அனைத்து ஆதாரங்களும் அரசிடம் இருந்திருக்க வேண்டும். அமைச்சர்கள் நேரில் சென்று பார்த்திருக்க வேண்டும். ஒரு தனிநபர் வீடியோ வெளியிடும்வரை நீங்கள் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்?” என்று செய்தியாளர்கள் ஜெயக்குமாரிடம் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், “ஜெயலலிதாவை பார்க்க எங்களை சசிகலா தரப்பு அனுமதிக்கவில்லை. மத்திய மாநில அமைச்சர்கள் பார்க்க வந்தபோதும் அவர்களை அனுமதிக்கவில்லை” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!