வெளியிடப்பட்ட நேரம்: 14:41 (20/12/2017)

கடைசி தொடர்பு:15:06 (20/12/2017)

கைதாகிறாரா வெற்றிவேல்?

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருப்பது போன்ற வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல் மீது வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் அவர் கைதாவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

வெற்றிவேல்

ஜெயலலிதா சிகிச்சைப் பெற்ற வீடியோவை டி.டி.வி.தினகரன் தரப்பினர் இன்று காலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டுள்ள வீடியோவில், ஜெயலலிதா பழச்சாறு அருந்திக்கொண்டே டி.வி பார்க்கிறார். தற்போது இந்த வீடியோவை தனியார் தொலைக்காட்சிகள் வெளியிட்டுவருகின்றன.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை வெளியிட்ட விவகாரத்தில் வெற்றிவேல் மீது வழக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து ராஜேஷ் லக்கானி வெளியிட்டுள்ள உத்தரவில், ``ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல் மீது ’126 பி’ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும்” எனத் தேர்தல் அதிகாரி பிரவீன் நாயருக்கு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து தேர்தல் அதிகாரி பிரவீன் நாயர் சென்னையில் உள்ள புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில் வெற்றிவேல் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகக் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.