`ஜெ. வீடியோவை தினகரனிடம் சசிகலா ஏன் கொடுத்தார்?' கிருஷ்ணப்ரியா பரபரத் தகவல் | Jaya Video: Sasikala's kin Krishnapriya condemns Vetrivel for releasing the video

வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (20/12/2017)

கடைசி தொடர்பு:15:40 (20/12/2017)

`ஜெ. வீடியோவை தினகரனிடம் சசிகலா ஏன் கொடுத்தார்?' கிருஷ்ணப்ரியா பரபரத் தகவல்

ஜெயலலிதா வீடியோ விவகாரத்தில் தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டதாகச் சசிகலாவின் உறவினர் கிருஷ்ணப்ரியா குற்றம்சாட்டியுள்ளார். 

ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வந்த நிலையில், அவர் சிகிச்சை பெறுவது போன்ற வீடியோ ஒன்றை வெற்றிவேல் இன்று வெளியிட்டார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோ வெளியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்தநிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா வெற்றிவேலின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், ‘ஜெயலலிதாவுடன் 33 ஆண்டுகள் ஒன்றாக இருந்த சசிகலாவை, கொலைகாரி என்று கூறியபோதுகூட, தற்காப்புக்காக நாங்கள் வீடியோவை வெளியிடவில்லை. ஜெயலலிதாவின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கக் கூடாது என்பதாலேயே இந்த வீடியோவை வெளியிடவில்லை. தினகரன் வெற்றிக்காகச் சசிகலாவே இந்த வீடியோவை வெளியிடச் சொன்னதாக சிலர் கூறுகிறார்கள். தன்மீது கொலைப்பழி விழுந்தபோது அதை வெளியிடாமல் இருந்த சசிகலா, விசாரணை கமிஷனெல்லாம் அமைக்கப்பட்ட பின் வீடியோவை வெளியிட சம்மதித்திருப்பாரா. இதை மக்கள் சிந்திக்க வேண்டும். 

அந்த வீடியோ சசிகலாவால் எடுக்கப்பட்டதுதான். அவரது அனுமதியுடன் நாங்கள்தான் அந்த வீடியோவை டி.டி.வி.தினகரனிடம் கொடுத்தோம். ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்திடம் அதை அளிக்க வேண்டும் என்று சசிகலா கூறியதால், அவரது ஒப்புதலோடு அந்த வீடியோவை தினகரனிடம் கொடுத்தோம். ஆனால், அந்த வீடியோவை வெற்றிவேல் தற்போது வெளியிட்டுள்ளார். எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது. விசாரணை ஆணையத்திடம் கொடுப்பதற்காகத் தினகரனிடம் கொடுக்கப்பட்ட வீடியோ, வெற்றிவேலிடம் எதற்காக, எப்படிச் சென்றது. இதுதொடர்பாகத் தினகரனிடம் நான் பேசவில்லை, விரைவில் விளக்கம் கேட்போம். வெற்றிவேல் நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஜெயலலிதா வீடியோவை வெளியிடுவதாக இருந்தால் சசிகலா வெளியிட்டிருப்பார். சசிகலாவின் அனுமதி இல்லாமலேயே வெற்றிவேல் இந்த வீடியோவை வெளியிட்டுவிட்டார்’ என்றார்.