`வருவாய் இன்றி கஷ்டப்படுகிறோம்' - ஒகி புயலிலிருந்து தப்பிய மீனவர்கள் கண்ணீர் மனு

ஒகி புயலில் சிக்கி உயிர் பிழைத்த மீனவர்கள் வாழ்வாதாரத்துக்கு உதவி கேட்டு ராமேஸ்வரம் மீன்துறை அதிகாரியிடம் முறையீடு செய்தனர்.

பாம்பன், தங்கச்சிமடம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள்  ஈஸ்டன், ஸ்டாலின், பன்னீர்செல்வம், அன்புக்குமார், விஜயேந்திரபூபதி, லொயோலன், அருளானந்தம் ஆகிய 7 மீனவர்களும் கன்னியாகுமரி மாவட்டம் நீரோடியைச் சேர்ந்த படகில் கேரள மாநிலம் கொச்சின் துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் 24-ம் தேதி மீன்பிடிக்கச் சென்றனர்.

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் நிவாரணம் கேட்டு மனு

5 நாள்களுக்குப் பின் மீன்பிடித்துவிட்டு கரை திரும்பும்போது ஏற்பட்ட ஒகி புயலில் சிக்கிக்கொண்டனர். கடும் அலைகளுக்கு மத்தியில் படகை இயக்க முடியாத நிலையில் 3 நாள்களாக உயிருக்குப் போராடிய மீனவர்களை இந்தியக் கடற்படையினர் காப்பாற்றி லட்சத்தீவில் கரை சேர்த்தனர். பின்னர், அங்கிருந்து கொச்சிக்கு அழைத்து வரப்பட்ட மீனவர்கள் 7 பேருக்கும் உதவித்தொகை அளித்து வேன் மூலம் சொந்த ஊரான பாம்பனுக்கு கேரள அரசு அனுப்பி வைத்தது. கடந்த 10-ம் தேதி சொந்த ஊர் வந்து சேர்ந்த மீனவர்களைச் சந்தித்த தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் விவரங்களைச் சேகரித்துச் சென்றனர்.

இந்நிலையில் கடந்த 20 நாள்களுக்கும் மேலாகத் தொழில் ஏதும் இல்லாத நிலையில் குடும்பத்துக்குத் தேவையான வருவாய் ஏதுமின்றி கஷ்டப்பட்டு வரும் தங்களுக்கு ஒகி புயல் நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் எனவும், மருத்துவ உதவிகள் வழங்கக் கோரியும் ராமேஸ்வரம் மீன்வளத்துறை உதவி இயக்குநரிடம் பாதிக்கப்பட்ட மீனவர்கள் குடும்பத்துடன் வந்து கண்ணீர் மல்க மனு அளித்தனர். பாதிக்கப்பட்ட மீனவர்களுடன் ஏ.ஐ.டி.யு.சி மீனவ தொழிலாளர் சங்க நிர்வாகிகள் எஸ்.முருகானந்தம், எஸ்.பி. ராயப்பன், ஞானசீலன் ஆகியோர் மீன்வளத்துறை அதிகாரிகளைச் சந்தித்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!