வெளியிடப்பட்ட நேரம்: 16:02 (20/12/2017)

கடைசி தொடர்பு:19:16 (20/12/2017)

ஐ.டி வேலை டு மஞ்சப்பை பிசினஸ் வரை... அசத்தும் மதுரை கெளரி கிருஷ்ணன்!

காலில் செருப்புகள் கிடையாது, விதவிதமான ஸ்கூல் பேக் கிடையாது ஒற்றை மஞ்சப்பையுடன் கால்கள் தேய நடக்கும் பள்ளி நாள்களின் சந்தோஷத்துக்குக் குறைவிருக்காது. மஞ்சப்பையை (துணிப்பையை)  இப்போதிருக்கும் பள்ளிக்குழந்தைகள் தூக்குவார்களா என்பது சந்தேகம்தான். ஆனால் அதையே தன் பிசினஸாகச் செய்துவருகிறார் ஐ.டி வேலையிலிருந்த கெளரி.

“பாட்டி காலத்துலேருந்தே மஞ்சப்பை இருக்கே” என்கிற மதுரையைச் சேர்ந்த கெளரி கிருஷ்ணன், மஞ்சப்பைகளைத் தயாரிக்க ஆரம்பித்தார். இந்த பிசினஸ் பெண்களுக்கு ஏற்றதுதானா? இதில் அவர் சந்தித்த சவால்கள் என்னென்ன" - இதோ அவரே சொல்கிறார்.

துணிப்பை

“நானும் என் ஹஸ்பெண்டும் பெங்களூருல, ஐ.டி. ஃபீல்டுல வொர்க் பண்ணிட்டிருந்தோம். டிரான்ஸ்ஃபர்ல சென்னைக்கு வந்து, பள்ளிக்கரணையில் குடியிருந்தோம். அங்கே அடிக்கடி குப்பைகள் கொளுத்துவாங்க. அதனால அந்தப் பகுதி காற்று ரொம்பவே மாசுப்பட்டிருக்கும். இதனால, என் பொண்ணுக்குச் சுவாசக் கோளாறு பிரச்னை வந்துடுச்சு. ஆரம்பத்தில் அலோபதி மெடிசன்ஸ் கொடுத்தோம். ஒண்ணும் சரியாகலை. மாற்று மருத்துவத்தில் சிகிச்சை கொடுத்ததும் பிரச்னை சரியாகிடுச்சு. பெண்ணின் ஹெல்த், அவளை கூடவே இருந்து கவனிச்சுக்கும் எண்ணத்துடன் சென்னை வேலையை ரிசைன் பண்ணிட்டு, சொந்த ஊரான மதுரைக்கு வந்துட்டோம். சென்னையில் இருந்தப்பவே பிளாஸ்டிக் பைகளின் நெகட்டிவ் விஷயங்கள் பற்றி நிறைய தெரிஞ்சுக்கிட்டேன். அதுல ஒரு விஷயம், பிளாஸ்டிக் பைகளை எரிச்ச புகையை ஒரு பாலூட்டும் தாய் சுவாசிச்சா, பால் குடிக்கும் குழந்தையும் பாதிக்கும் என்பது. இது என் மனசை அரிச்சுட்டே இருந்துச்சு. சொந்த ஊருக்கு வந்ததும், நம்ம பாரம்பர்ய மஞ்சப்பைத் தயாரிச்சு விற்கலாம்னு முடிவெடுத்தோம். 2014-ம் வருஷம் இந்த பிசினஸை ஆரம்பிச்சோம்” என்கிறார் கெளரி. 

துணிப்பை

இந்தத் தொழிலில் சந்தித்த சவால்களையும் சொல்கிறார். “முதல்ல ஃபேக்டரியாக ஆரம்பிக்காமல், டெய்லரிங் தொழில் பண்ணிக்கிட்டிருந்த பெண்களிடம் துணியைக் கொடுத்து தைச்சு வாங்கினோம். கொஞ்சம் தைரியம் வந்ததும், சின்னதா ஆபீஸ் போட்டு ஐந்து பெண்களை வேலைக்கு எடுத்து, பிசினஸை ஆரம்பிச்சோம். எங்களை மாதிரியே பிளாஸ்டிக்குக்கு எதிரானவங்க அவங்க வீட்டுக் கல்யாணத்துக்கு, பிறந்த நாள் விழாவுக்கு மஞ்சப்பைகளை வாங்க ஆரம்பிச்சாங்க. அந்தந்த விழாவுக்கு ஏற்ப, பையில் பிரின்ட் பண்ணி விற்க ஆரம்பிச்சோம். அப்புறம், ஹெர்பல் ரிலேட்டான அழகுப் பொருள்களை விற்கிறவங்க, ஆர்கானிக் குரூப்ஸ் எங்களுக்கு ஆர்டர் கொடுக்க ஆரம்பிச்சாங்க. இதெல்லாம் நடக்கிறதுக்கு ஒன்றரை வருஷம் ஆச்சு. அதுவரை ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டோம்'' என்கிறார். 

தன் நிறுவனத்தில் கணவன் இல்லாத பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் போன்றவர்களுக்கு முன்னுரிமை கொடுத்திருக்கும் கெளரி, சாயம் ஏற்றாத காட்டன் துணிகளில்தான் பைகளை உருவாக்குகிறார்.

துணிப்பை

“இந்த பிசினஸில் ஆர்டர் அதிகமா இருக்கும்போது, ஒருநாளைக்கு 500 பைகள் வரை தேவைப்படும். ஆனா, அந்தச் சமயத்துல வேலை பார்க்கிறவங்க உடல்நலம், பர்சனல் பிரச்னைன்னு டல்லா இருக்கிறதுண்டு. சில சமயங்களில் டீம் சுறுசுறுப்பா இருக்கும். கையில ஆர்டர் இருக்காது. தவிர, எங்களால பீஸ் ரேட்டுக்குதான் சம்பளம் கொடுக்க முடியும். ஆனா, பணியாளர்கள் மாச சம்பளம் கேட்பாங்க. இப்படி நிறைய சவால்கள் இருக்கு. அதையெல்லாம் சமாளிச்சுதான் செய்துட்டிருக்கோம். ஏன்னா, இதை ஜஸ்ட் பிசினஸாக மட்டுமே செய்யலை. நம்ம மண்ணுக்கும் வருங்கால தலைமுறைக்கும் எங்களால முடிஞ்ச நல்லதை செய்துட்டிருக்கோம். அதனால, தொடர்ந்து இயங்கிட்டிருக்கோம். விதவிதமான காட்டன் பைகள், பவுச் என ஒரு மாதத்துக்குச் சுமார் 30,000 பைகளைத் தயாரிக்கிறோம். இது ஒரு லட்சமா அதிகரிக்கணும். மண்ணுக்கும் மனசுக்கும் திருப்தி கிடைக்கணும்'' எனப் புன்னகைக்கிறார் கெளரி கிருஷ்ணன். 


டிரெண்டிங் @ விகடன்