இலங்கைச் சிறையில் அம்மை நோயால் வாடும் மீனவர்கள்! விடுவிக்க குடும்பத்தினர் கோரிக்கை

இலங்கைச் சிறையில் நீண்ட நாள்களாக இருந்து வரும் மீனவர்கள் அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோப்புப்படம்

பாக் நீரிணை பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை அரசு சிறைபிடித்துச் சென்று யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா சிறைகளில் அடைத்துள்ளது. தற்போது வரை இலங்கை சிறைகளில் தமிழக மீனவர்கள் 144 பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் கடந்த அக்டோபர் மாதம் மண்டபத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற பாண்டி உட்பட 28 மீனவர்கள் வவுனியா சிறையில் இருந்து வருகின்றனர். இதில் பாண்டி, அந்தோணிச்சாமி, சந்தியா, அருளானந்தம், ரோமியோ, இசக்கிமுத்து, மாரியப்பன் உள்ளிட்ட 8 பேருக்கு அம்மை நோய் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களின் உடலில் ஏற்பட்டுள்ள கொப்பளங்களுடன் சிறையில் அவதியுற்று வருகின்றனர். தற்போது வவுனியா சிறையில் உள்ள மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அங்கு சிறை வைக்கப்பட்டிருக்கும் மற்ற மீனவர்களுக்கும் அம்மை நோய் பரவ வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, நீண்ட நாள்களாகச் சிறை வைக்கப்பட்டிருக்கும் மீனவர்களையும் அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களையும் சிறையிலிருந்து விடுவித்து சொந்த ஊருக்குத் திரும்ப அழைத்துவர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!