மலேசியா மணலை வேறிடத்துக்கு மாற்றத் தூத்துக்குடி கலெக்டர் கடும் எதிர்ப்பு! | Thoothukudi collector opposing changing place of malaysian sand

வெளியிடப்பட்ட நேரம்: 17:45 (20/12/2017)

கடைசி தொடர்பு:17:45 (20/12/2017)

மலேசியா மணலை வேறிடத்துக்கு மாற்றத் தூத்துக்குடி கலெக்டர் கடும் எதிர்ப்பு!

தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதத்தில் மூட வேண்டும் எனக் கடந்த நவம்பர் 29-ல் தனி நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி நெல்லை, தூத்துக்குடி, குமரி  மாவட்ட ஆட்சியர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த மேல்முறையீட்டு வழக்கில் ராமையா என்டர்பிரைசஸ் தரப்பில் துணை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், ''மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை வைப்பதற்கு கட்டணமாகத் தூத்துக்குடி துறைமுகம் தரப்பில் நாளொன்றுக்கு 6 லட்ச ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதுவரை 1 கோடியே 71 லட்ச ரூபாயைத் செலுத்த வேண்டும் எனத் துறைமுகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கூடுதல் கட்டணம் என்பதால், துறைமுகத்தில் குறைவான கட்டணம் வசூலிக்கப்படும் பகுதிக்கு மலேசிய மணலை மாற்ற அனுமதிக்க வேண்டும். அங்கு கட்டணம் குறைவு. அதற்கான குறிப்பிட்ட இடத்தில் அனுமதி பெறப்பட்டு, கட்டணமும் செலுத்தப்பட்டுள்ளது. ஆகவே, மணலை வ.உ.சிதம்பரனார் துறைமுக கழகத்தின் மற்றொரு பகுதிக்கு மாற்ற அனுமதிக்க வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் கல்யாணசுந்தரம், கிருஷ்ணவள்ளி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தூத்துக்குடி ஆட்சியர் தரப்பில், மணலை வேறு பகுதிக்கு மாற்றக் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், துணை மனுவில் எத்தகைய உத்தரவையும் பிறப்பிக்க இயலாது. ஆகவே அதைத் தனி ரிட் மனுவாகத் தாக்கல் செய்ய அனுமதி வழங்கி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.