‘வீடியோ சரிதான்... ஆனால்?’ - அப்போலோவுக்கு மருத்துவரின் 3 கேள்விகள் | Three questions to apollo from doctor

வெளியிடப்பட்ட நேரம்: 17:22 (20/12/2017)

கடைசி தொடர்பு:17:22 (20/12/2017)

‘வீடியோ சரிதான்... ஆனால்?’ - அப்போலோவுக்கு மருத்துவரின் 3 கேள்விகள்

apollo

மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவரும் வீடியோ இன்று காலையில் வெளியானதிலிருந்து பல விதமான கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன.

அரசியல் ரீதியாக ஆர்.கே.நகர் தேர்தல் நாளை நடைபெறவிருக்கும் நிலையில் இன்று இந்த வீடியோ வெளியிடப்பட்டதற்கான காரணம் குறித்து ஒரு புறம் கேள்விகள் எழுகின்றன. மற்றொரு புறம் இந்த வீடியோவின் மீதான உண்மைத் தன்மையும் அப்போலோ நிர்வாகத்தின் விளக்கங்கள் மீதான விவாதங்களும் தற்போது எழுந்துள்ளன.

எம்.ஜி.ஆர் வெளிநாட்டில் சிகிச்சை பெற்றபோது, அது தொடர்பான வீடியோ, புகைப்படம் பத்திரிகைகளுக்கு வழங்கப்பட்டன. அதேபோல் ஜெயலலிதா சிகிச்சை பெறும்போது ஏன் எந்த வீடியோவும் புகைப்படங்களும்கூட வெளியிடப்படவில்லை என்ற கேள்விதான் முதலிலிருந்தே நீடிக்கிறது. ஆனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள வீடியோ வேறு சில தகவல்களையும் கேள்விகளையும் தந்துள்ளது.
இதுகுறித்து சூழலியலுக்கான மருத்துவர்கள் சங்கத்தின் புகழேந்தி நம்மிடம் பேசுகையில்,

1. “மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிகிச்சைப் பெற்ற வீடியோவின் உணமைத்தன்மை 100 சதவிகிதம் உறுதிபடுத்தப்படாவிட்டாலும் இந்த வீடியோ `மார்ஃபிங்’ செய்யப்பட்டது இல்லை என்றே சைபர் க்ரைம் நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த வீடியோவை கூர்ந்து கவனிக்கும்போது ஜெயலலிதாவின் பார்வை ஒரே திசையில் நோக்கி மட்டுமே நிலைத்திருப்பதை நம்மால் கவனிக்க முடியும். இதன் மூலம் ஜெயலலிதா டி.வி பார்த்துக்கொண்டிருப்பதாகக் கூறப்படுவது சந்தேகிக்கக்கூடியதாக இல்லை.

2. ஆனால், ஜெயலலிதா என்பவர் எம்.ஜி.ஆர் போலவே தனது பிம்பத்தை தக்க வைத்துக்கொள்ளவே விரும்புகிறவர். இந்தச் சூழலில் உடை விலகிய நிலையில் எடுக்கப்பட்டிருக்கும் வீடியோ ஜெயலலிதா அறிந்துதான் எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுகிறது. ஒரே திசையில் நிலைகொண்டிருக்கும் அவரின் பார்வையும் இதை உறுதிப்படுத்துகிறது.

3. ஜெயலலிதா சிகிச்சை குறித்த அதிகாரபூர்வ மருத்துவ அறிக்கையை வைத்துப் பார்க்கும்போது இந்த வீடியோ நவம்பர் 22-ம் தேதிக்கு மேல் 30-ம் தேதிக்குள் எடுக்கப்பட்டிருக்கலாம் என்றே தெரிகிறது. அவரது மருத்துவ அறிக்கையின் அடிப்படையில் ஜெயலலிதாவுக்கு நவம்பர் 22-ம் தேதிக்குப் பின்னர், புதிய வகை கிருமியால் மீண்டும் நிமோனியா தாக்குகிறது. இதன் பிறகு, அவருக்கான ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. ஆனால், ஐ.சி.யூ-விலிருந்து அதிகக் கண்காணிப்பு மிகுந்த அறைக்கு மாற்றப்பட்ட ஜெயலலிதா டிசம்பர் 2-ம் தேதி மீண்டும் நிமோனியா தாக்கிய பின்னர் மறுபடியும் ஐசியூ-வுக்கு கொண்டு செல்லப்படாதது ஏன்?

இதன் பின்னர்தான் ஜெயலலிதாவின் நிலை மோசமாகியுள்ளது. அதன் பின்னர் டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா மறைந்துவிட்டதாக அறிவிக்கப்படுகிறது.”