வெளியிடப்பட்ட நேரம்: 19:10 (20/12/2017)

கடைசி தொடர்பு:19:10 (20/12/2017)

துப்புரவுப் பணிகளுக்காக விடப்பட்ட டெண்டருக்கு இடைக்காலத் தடை!

தூத்துக்குடியைச் சேர்ந்த ராபின் சித்தரஞ்சன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.  அந்த மனுவில், "தூத்துக்குடி மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. அதில் 29 வார்டுகளில் மாநகராட்சிப் பணியாளர்கள் துப்புரவுப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். மீதமுள்ள 31 வார்டுகளில் 3 வருடங்களுக்கான துப்புரவுப் பணிக்கான ஒப்பந்தப்புள்ளி கேட்கப்பட்டது. குப்பைகளைச் சேகரிக்க மட்டும் 11 கோடியே 6 லட்சத்துக்குத் தற்போதைய ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த ஆண்டுகளில் இந்த ஒப்பந்த பணியைச் செய்துவரும் நிறுவனங்கள் இதைவிடக் குறைந்த கட்டணத்திலேயே செய்து வருகின்றனர். தற்போது தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஆணை ஒப்பந்தப் பணிகள் எந்தெந்த வார்டுகளுக்கானது என்பது குறிப்பிடப்படவில்லை. மொத்தமாக 600 பணியாளர்கள் என்ற தகவல் மட்டுமே இடம்பெற்றுள்ளது. ஆகவே, தூத்துக்குடி நகராட்சியில் துப்புரவுப் பணிகளுக்காக விடப்பட்ட டெண்டருக்குத் தடை விதிக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வேணுகோபால், தாரணி அமர்வு தூத்துக்குடி நகராட்சியில் துப்புரவுப் பணிகளுக்கான விடப்பட்ட டெண்டருக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், இது குறித்து தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் பதில்மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 5-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.