'எங்களுக்கு நீதி வேண்டும்'- கலெக்டர் அலுவலகம் முன்பு கொந்தளித்த பெண்கள்

protest

கிராமங்களில் வறுமையினால் கஷ்டப்படும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியா முழுவதும் சுமார் 9.20 கோடி மக்கள் இந்த திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர். தமிழகத்தில் மட்டும் 70 லட்சம் மக்கள் இந்த திட்டத்தில் உறுப்பினராக உள்ளனர். வருடத்தில் 100 நாள்கள் வேலையும், தினக்கூலியாக ரூ.205-ம் நிர்ணயம் செய்யப்பட்டு உறுதியளிக்கப்பட்டது. ஆனால், தற்போது 20 முதல் 40 நாள்கள் மட்டுமே வேலை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், தினக்கூலி ரூ.205க்கு பதிலாக 100 முதல் 120 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது.

இதனைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், மதுரையை சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுகுறித்து அவர்கள், "தற்போது ஆட்சியில் உள்ள பா.ஜ.க அரசு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கான போதுமான நிதியை ஒதுக்கீடு செய்யாமல் இந்த திட்டத்தை முடமாக்கியுள்ளது. மாநில அரசும் மத்திய அரசின் இந்தச் செயலுக்கு துணை நின்று, கிராமப்புற மக்களை வஞ்சித்து வருகிறது. அரசின் இத்தகைய செயல்கள்,100 நாள் வேலைத்திட்டத்தை மட்டுமே நம்பி, அன்றாடம் பிழைப்பை நடத்தி வரும் ஏழைக் குடும்பங்களின் வயிற்றில் அடிப்பதாக உள்ளது. எனவே, அரசு இதை கருத்தில் கொண்டு இந்த திட்டத்தை மீண்டும் சீர்ப்படுத்த வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் உறுதியளிக்கப்பட்ட 100 நாள் வேலை மற்றும் ரூ.205 தினக்கூலியாக வழங்க வேண்டும்" என தெரிவித்தனர்.


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!