வெளியிடப்பட்ட நேரம்: 20:10 (20/12/2017)

கடைசி தொடர்பு:20:10 (20/12/2017)

வலையில் சிக்கி உயிருக்குப் போராடிய கடல் ஆமை; மீட்டெடுத்த வன உயிரினப் பாதுகாவலர்கள்

மீனவர்கள் வலையில் சிக்கி காயமடைந்த நிலையில் கரையொதுங்கிய கடல் ஆமை ஒன்றினை வன உயிரினப் பாதுகாவலர்கள் மீட்டு மீன் அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தனர்.

மீனவர்கள் வலையில் சிக்கியதால் உயிருக்கு போராடும் ஆமை

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ஏராளமான கடல் ஆமைகள் உள்ளன. நாடு முழுவதும் கடல் மற்றும் நீர்நிலைப் பகுதிகளில் 5 வகை ஆமைகள் இருந்தாலும் அவற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகின்றன. கடற்பரப்பின் தூய்மை காவலனாக விளங்கும் ஆமை இனங்களை அழிவிலிருந்து பாதுகாக்கும் வகையில் ஆமைகள் பிடிப்பது தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் வலையில் யதேச்சையாக ஆமைகள் சிக்கினாலும் அவற்றை கரைப்பகுதிக்குக் கொண்டு வருவதில்லை. அதனையும் மீறி வந்துவிட்டால் அதனை கரையோரப் பகுதிகளில் யாருக்கும் தெரியாமல் விட்டு விடுகின்றனர்.

இந்நிலையில் மண்டபத்தை அடுத்துள்ள பிரப்பன்வலசை கடலோரப் பகுதியில் நீந்த இயலாத நிலையில் சித்தாமை ஒன்று உயிருக்குப் போராடிய நிலையில் கரையொதுங்கியது. இதுகுறித்து தகவலறிந்த மண்டபம் வன உயிரினப் பாதுகாப்பு வனச்சரகர் சதீஷ் தலைமையிலான அலுவலர்கள் அப்பகுதிக்குச் சென்று உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அந்த ஆமையினை மீட்டனர். மீனவர்களின் வலையில் சிக்கியதால் துடுப்பினை இழந்த அந்த ஆமையினை பாதுகாப்பாக எடுத்து சென்ற மண்டபத்தில் உள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி மையத்தின் அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தனர்.