'துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட உடல்'- கடன்கொடுத்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

நகைக்காக கொலை

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள கிராமம் கொசவபட்டி. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் இசெபெல்லா. திருமணமாகி, கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்துப் பெற்றவர். இவரது வீட்டுக்கு அருகே செபஸ்தியான் என்பவர் குடும்பத்துடன் வசித்துவருகிறார். இரண்டு குடும்பங்களும் நன்றாகப் பழகி வந்தனர். இந்த நிலையில், அவசரத் தேவைக்காக, இசெபெல்லாவிடம் எட்டு பவுன் நகை மற்றும் ரொக்கமாகப் பணம் ஆகியவற்றை கடனாக வாங்கியிருக்கிறார் செபஸ்தியான். கடன் வாங்கி நீண்ட காலமாக திருப்பிக் கொடுக்காததால் கடனை திருப்பிக்கொடுக்குமாறு இசெபெல்லா அடிக்கடி கேட்டுக்கொண்டிருந்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த செபஸ்தியான் மற்றும் அவரது மனைவி ஜோதி ஆகியோர் இசெபெல்லாவை அடித்துக் கொலைசெய்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஆறு மாதமாக இசெபெல்லாவை காணவில்லை. செபஸ்தியான் மற்றும் அவரது மனைவி ஜோதி மீது சந்தேகம் இருப்பதாக சாணார்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், புகார்மீது எந்த நடவடிக்கையும் இல்லாததால், இசெபெல்லாவின் தம்பி மார்டின், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் ஒருமாதத்துக்குள் இசெபெல்லாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி சாணார்பட்டி காவல்நிலையத்துக்கு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து இசெபெல்லாவை தேடும் பணியைத் தீவிரப்படுத்திய காவல்துறையினர், செபஸ்தியானை அழைத்து விசாரணை செய்தனர். அப்போது, நகை மற்றும் பணத்துக்காக இசெபெல்லாவை கொலை செய்ததை செபஸ்தியான் மற்றும் அவரது மனைவி ஜோதி ஆகியோர் ஒப்புக்கொண்டார்கள். இசெபெல்லாவை கொலை செய்து உடலைத் துண்டு துண்டாக வெட்டி, அருகே இருந்த ஆழ்துளை கிணற்றில் வீசியதாகக் கூறியதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர், ஜேசிபி மற்றும் போர்வெல் இயந்திரம் மூலமாக இசெபெல்லா உடலை தோண்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். காணாமல் போனதாகக் கருதப்பட்டவர், கொலையான தகவலால் கொசவபட்டி கிராமம் அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!