”டிசம்பர் 22-ல் தொடங்குகிறது இந்திய நாட்டிய விழா! களைகட்டும் மாமல்லபுரம்

மாமல்லபுரம் பகுதியில் வருடந்தோறும் நடைபெறும் இந்திய நாட்டிய விழா வரும் டிசம்பர் 22-ம் தேதி தொடங்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு சுற்றுலாத்துறையிடமிருந்து வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய நாட்டிய விழா, மாமல்லபுரம்

டிசம்பர் வந்தாலே வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகளால் மாமல்லபுரம் கலைகட்டத் தொடங்கிவிடும். பகலில் பல்லவ சிற்பங்கள், இரவில் இந்திய பாரம்பர்ய நடனங்கள் என மகிழ்ச்சியாகப் பொழுதை கழிக்க சுற்றுலாப்பயணிகள் வருவார்கள். தொடக்க காலத்தில் பொங்கல் விழாவாக மூன்று நாள்கள் மட்டுமே நடைபெற்று வந்தது. 1992 ல் இருந்து இந்திய நாட்டிய விழாவாக இவ்விழா கொண்டாடப்படுகிறது. பரத நாட்டியம், குச்சுப்புடி, ஒடிசி உள்ளிட்ட நடனங்களும், நாட்டுப்புறக் கலைஞர்கள் பங்கு பெறும் கலை நிகழ்ச்சிகளும் இதில் நடைபெறும். வரும் திங்கட்கிழமை சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் ஆகியோர் இந்திய நாட்டிய விழாவினை தொடங்கிவைக்கின்றனர்.

தினமும் மாலை 5.30 மணியிலிருந்து இரவு 8.30 வரை ஒரு மாதத்துக்கு நாட்டிய விழா நடைபெறும். இதற்கு பார்வையாளர்களிடமிருந்து சுற்றுலாத்துறை எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. பாரம்பர்ய நடனங்களைக் காண்பதற்காகவே சுற்றுவட்டாரத்திலிருந்து மாமல்லபுரத்துக்கு நிறையபேர் வருகிறார்கள். வெள்ளம், வர்தா புயல், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் போன்ற காரணங்களால் கடந்த சில ஆண்டுகளாக நாட்டிய விழா நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. கடந்த வருடம் சம்பிரதாயத்துக்காக நாட்டிய விழா நடைபெற்ற நிலையில் இந்த வருடம் மீண்டும் புதுப்பொலிவுடன் நாட்டிய விழா நடைபெறவிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!