'ஊதியக்குழுவால் வஞ்சிக்கப்பட்டுள்ளோம்'- கலெக்டர் அலுவலகம் முன் போராடிய அங்கன்வாடி ஊழியர்கள்

அங்கன்வாடி ஊழியர்கள் தமிழகம் முழுவதும் தங்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தி அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர். 

அங்கன்வாடி ஊழியர்கள்

தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தர்மபுரி மாவட்ட தலைவர் தெய்வானை பேசும்போது, அங்கன்வாடி பணியாளர்கள் தங்களின் பணிகளைக் கடந்து பலதுறைகளின் பணிகளைச் செய்து வருகிறோம். எங்களின் உழைப்பைக் காலம் கருதாமல் பொதுமக்களின் நலனுக்காகச் செய்கிறோம். ஆனால் எங்களுக்கான ஊதியத்தை இளநிலை உதவியாளர்களுக்கு இணையாக வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று எங்கள் ஊதியத்தில் 2.57 என்ற எண் விகிதாச்சாரப்படி அறிவிக்கப்பட்டுள்ளது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கின்றது. இதனால் எங்களின் ஓய்வூதியமும் வெகுவாகக் குறைந்துள்ளது. இந்தச் செயல் அங்கன்வாடி ஊழியர்களை அரசு வஞ்சித்துள்ளது'' என்றார். 

இந்தப் போராட்டத்தின் மூலம் அங்கன்வாடி ஊழியர்களுக்குப் பாண்டிச்சேரி அரசு வழங்குவதுபோல இளநிலை உதவியாளர்களுக்கான ஊதியத்தை வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு முறையான ஓய்வூதியம் வழங்க வேண்டும், 2016 ஊதியக்குழு நிலுவை தொகையை ரொக்கமாக வழங்க வேண்டும் மற்றும் மே மாதத்தில் கோடை விடுமுறை வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்திப் போராட்டம் நடத்தினார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!