வெளியிடப்பட்ட நேரம்: 20:54 (20/12/2017)

கடைசி தொடர்பு:21:30 (20/12/2017)

திருநங்கைகளைத் தெரியும்... திருநம்பிகள் பற்றி தெரியுமா? - மாற்றுப்பாலினத்தவர் உரிமையை மசோதா மீட்குமா - பகுதி 2

மாற்றுப்பாலினத்தவர் மசோதா

ராஜ்ய சபாவில் நிறைவேற்றப்பட்ட மசோதா, லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டு... பின்னர், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு அதற்குப்பிறகே சட்டமாக உருமாறும். இந்த இடைவெளியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அந்த வகையில் ராஜ்ய சபாவில் தாக்கல் செய்யப்பட்ட ‘மாற்றுப் பாலினத்தவர்களுக்கான உரிமைகள் மசோதா – 2014’ அப்படியே கிடப்பில் போடப்பட்டு... புதிய விதிகளோடு, புதிய சட்ட வரைவுகளோடு கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி லோக்சபாவில், மாற்றுப் பாலினத்தவர்களின் (உரிமைப் பாதுகாப்பு) மசோதா – 2016 என்ற பெயரில் தாக்கல் செய்தது ஆளும் பி.ஜே.பி. அரசு.! 

சட்டப்படி சாத்தியமா?

ஒரு மசோதா ராஜ்ய சபாவில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட பின்னர், அதே நோக்கத்தோடு இன்னொரு மசோதாவைப் புதிதாக தாக்கல் செய்ய முடியுமா என்று கேட்டால், ‘ஏன் முடியாது’ என்றுதான் பதில் அளிக்கத் தோன்றும். நம் நாடாளுமன்றத்தில் எத்தனையோ மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு இன்றும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. அதேநேரத்தில், ஒரு சபையில் நிறைவேற்றப்பட்டு இன்னொரு சபைக்கு நகராமல் கிடக்கும் மசோதாக்களும் அதிகம். இந்த இரண்டு சபைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு குடியரசுத் தலைவர் கையெழுத்துப் போட்ட நிகழ்வும் இங்கே நடந்திருக்கின்றன. அப்படியே சட்டமானாலும் அதனை நடைமுறைப்படுத்த மத்திய அரசு தயக்கம் காட்டி அதனை நீதிமன்றம் பலமுறை கண்டித்த சம்பவங்களும் உண்டு.

திருநங்கைகள்

‘அவசரத்தில் அண்டாவில் கைவிட்டாலும் நுழையாது' என்று சொல்வதுபோல ஏதோ அவசரத்தில் கொண்டுவரப்பட்ட மசோதாவாகவே தற்போதைய திருநங்கைகள் சமூகத்தவர்கள் பார்க்கிறார்கள். மேலும், மசோதாவில் உள்ள சில பிரச்னைகளைப் பற்றி விவாதிக்கிறார்கள். சிலர் மசோதாவைக் கடுமையாக எதிர்க்கவும் செய்கிறார்கள். 

புறந்தள்ளப்பட்ட நிலைக்குழுவின் நிலைப்பாடு!

தற்போது லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவால், ஏற்கெனவே ராஜ்ய சபா மசோதா தேவைப்படாது என்று முடிவெடுக்கப்பட்டு, உறுப்பினர்கள் ஓட்டுப்போட்டு மசோதாவைத் தள்ளுபடி செய்வார்கள். இந்தச் சூழலில் கடந்த காலங்கள் மசோதாவுக்காக உழைத்த அனைவரது பங்களிப்பும் வீணாகும். தற்போது லோக்சபாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மசோதாவைப் பலரும் ஆட்சேபம் தெரிவித்த சூழலில், அந்த மசோதாவில் என்ன மாற்றங்கள் செய்யலாம் என்பது குறித்து முடிவெடுக்க நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அது சென்றது. கடந்த எட்டு மாதங்களாக நாட்டின் பல்வேறு சமூகக் கட்டமைப்புகளில் செயல்படும் திருநங்கைகள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் அனைவரும் ஒவ்வொருவராக நிலைக்குழுவின் முன் ஆஜராகி, மசோதாவில் செய்ய வேண்டிய மாற்றங்கள் தொடர்பாகத் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். அனைத்தையும் கேட்டுக்கொண்ட நிலைக்குழு, மத்திய அரசுக்கு ஓர் அறிக்கையைச் சமர்ப்பித்தது. அதில், மசோதாவில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து சொல்லப்பட்டிருந்தது. அவற்றையெல்லாம் புறந்தள்ளிய மத்திய அரசு, சட்ட ஆணையத்தின் அனுமதியைப் பெற்று நடக்கவிருக்கும் குளிர்கால கூட்டத்தொடரில், வாக்கெடுப்புக்கு விட இருக்கும் மசோதாக்களின் வரிசையில்  சேர்த்துவிட்டது குறிப்பிடத்தக்கது. மசோதாவில் என்னதான் இருக்கிறது... ஏன் அனைவரும் மசோதாவை எதிர்க்க வேண்டும்... திருச்சி சிவாவின் மசோதாவுக்கும் பி.ஜே.பி. கொண்டுவந்துள்ள மசோதாவுக்கும் என்ன வேறுபாடு?

விளங்க முடியா விளக்கம்:

இந்திய வரலாற்றிலேயே, ஏன், உலக வரலாற்றிலேயே ஒரு சட்டம் யாருக்கானது என்ற தெளிவு இல்லாமல் கொண்டுவரப்பட இருக்கும் சட்டமாக மாற்றுப் பாலினத்தவர்களின் (உரிமைப் பாதுகாப்பு) சட்டம் அமையும். காரணம், சட்டத்துக்கான மசோதா குறிப்பிடும் குழப்பமான விளக்கம்தான். மாற்றுப் பாலினத்தவர்கள் என்றால், யாருடைய கேள்விக்கும் இதுவரை யாரும் விளக்கம் கொடுக்க முடியாத சூழல் நிலவுகிறது. கடந்தகாலங்களில், 2014 ஏப்ரல் 15-ல் வெளியான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிலோ, திருச்சி சிவா கொண்டுவந்த மசோதாவிலோ, தற்போது மத்திய அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் மசோதாவிலோ தெளிவான விளக்கத்தைப் பார்க்க முடியவில்லை என்ற கருத்து பரவலாக முன்வைக்கப்படுகிறது. இது மாற்றுப் பாலினத்தவர்களின் முன்னேற்றத்தில் ஏற்பட்ட தொய்வாகவே பார்க்க முடிகிறது.

யார் மாற்றுப் பாலினத்தவர்கள்? 

Transgenders என்பதன் நேர் மொழிபெயர்ப்புதான் மாற்றுப் பாலினத்தவர்கள். இதனை, 'மாறிய பாலினத்தவர்கள்' எனவும் குறிப்பிடலாம். அதாவது, தனது பாலின அடையாளங்களிலிருந்து வேறொரு அல்லது நேர் எதிரான பாலின அடையாளங்களுக்கு மாறியவர்கள் என்பதே இதன் உள்ளார்ந்த பொருள். 

தற்போது லோக்சபாவில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மசோதாவில், '(1) திருநங்கை என்பவர் ஒரு நபர். (2) முழுமையான ஆண் அல்லது முழுமையான பெண். (3) ஆண் அல்லது பெண் கலவையாகும் அல்லது பெண் அல்லது ஆண் கலவையாகும். (4) பிறப்பால் ஆண், பெண் என்று ஒதுக்க முடியாத பாலினமாகும். அதில் திருநங்கைகள், திருநம்பிகள், இடையிலிங்க (Intersex Persons) மனிதர்களும் அடக்கம்' என்று விளக்கம் கொடுக்கிறது. இது, மிகப்பெரிய குழப்பத்தையும் சில விவாதங்களையும் எழுப்புகிறது. அதில் பிரதானமாகத் திருநங்கைகள் சார்ப்பில், 'எங்களுடன் திருநம்பிகளைச் சேர்க்காதீர்கள். நாங்கள்தான் முழுமையான மாற்றுப் பாலினத்தவர்கள். எங்களால்தான் முழுமையாக ஆணில் இருந்து பெண்ணாக மாற முடியும். திருநம்பிகளால் பெண்ணில் இருந்து முழுமையாக ஆணாக மாற முடியாது…' போன்ற கருத்துகள் முன்வைக்கப்படுகிறது. அதே நேரம், தங்களுக்கான தனி மசோதா வேண்டும் எனவும் திருநம்பிகள் தங்கள் கருத்தை முன்வைக்க மறக்கவில்லை. அதே நேரம், திருநங்கைகளுக்கான உரிமைகள் தொடர்பாகப் பேசும்போது எங்களையும் குறிப்பிட்டுப் பேச வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கிறார்கள். இது ஒருபுறம் என்றால், மறுபுறம், இடையிலிங்க மனிதர்கள் (Intersex Persons) ‘எங்களை இந்த மாற்றுப் பாலினத்தவர்கள் பட்டியலில் சேர்ப்பதே தவறு..’ என்று தங்கள் கருத்தை முன்வைக்கிறார்கள். 

திருநங்கைகள்

இடையிலிங்க மனிதர்கள் (Intersex Persons):

உலகம் முழுவதிலும் ‘இடையிலிங்க’ மனிதர்கள் குறித்த பார்வை தற்போதுதான் விரிவடையத் தொடங்கியிருக்கிறது. பிறப்பால் ஆண் மற்றும் பெண் பிறப்புறுப்பைக் கொண்ட அல்லது தெளிவற்ற பிறப்புறுப்பைக் கொண்ட மனிதர்களே இடையிலிங்க மனிதர்கள் ஆவர். காமன்வெல்த் விருது பெற்றவரும், இந்தியா மற்றும் ஆசிய பிராந்தியத்தில் இடையிலிங்க சமூகத்தின் நிலை குறித்து உலகம் முழுவதிலும் பல்வேறு கருத்தரங்குகளில் பங்கேற்று பேசி வருபவருமான, இடையிலிங்க மனிதர் கோபி சங்கரிடம் பேசினோம், “மத்திய அரசு கொண்டுவந்துள்ள `மாற்றுப் பாலினத்தவர்களின் (உரிமைப் பாதுகாப்பு) மசோதா – 2016’ நல்ல தொடக்கம் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இருந்தபோதும் மசோதா யாருக்கானது என்ற குழப்பம் இருக்கிறது.

மாற்றுப் பாலினத்தவர்கள் என்று சொல்லி அதில் இடையிலிங்க மனிதர்களைச் சேர்த்ததை நான் எப்போதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். இடையிலிங்க மனிதர்களுக்கு என தனி மசோதாவோ அல்லது மாற்றுப் பாலினத்தவர்கள் மற்றும் இடையிலிங்க மனிதர்கள் (உரிமைப் பாதுகாப்பு) மசோதா – 2016 என்றோ கொண்டுவந்திருக்கலாம். காரணம், ஆண், பெண் போன்று பிறப்பால் இடையிலிங்க மனிதர்கள் ஒரு பாலின அடையாளமாகக் கருத வேண்டியவர்கள். ஆனால், திருநம்பிகளோ, திருநங்கைகளோ அப்படி இல்லை. அவர்கள் பிறப்பால் ஒன்று ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ பிறந்திருப்பார்கள். அவர்களோடு எங்களையும் சேர்ந்து மொத்தமாக மாற்றுப் பாலினத்தவர்கள் என்று சொல்வது முற்றிலும் தவறானது. இச்செயல், இடையிலிங்க மனிதர்கள் பற்றி உலக சுகாதார நிறுவனம் (WHO) கொடுத்த விளக்கத்தை மீறும் செயலாகவே நான் பார்க்கிறேன்'' என்றார். 

‘நீங்கள் சந்திக்கும் 200 பேரில் ஒருவர் இடையிலிங்க மனிதராக இருக்கலாம்' என்கிறது ஐ.நா. இந்தியா போன்ற பெரும் மக்கள்தொகை கொண்ட நாட்டில் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம். இதுவரை, இந்தியாவில் எத்தனை இடையிலிங்க மனிதர்கள் பிறந்திருக்கிறார்கள் என்ற புள்ளிவிவரம் அரசிடம் இல்லை. வருடத்துக்குச் சுமார் 10 ஆயிரம் பேர் இடையிலிங்க மனிதர்களாகப் பிறக்கிறார்கள் என்றும், அதில் 8ஆயிரம் பேர்வரை சிசுவிலேயே கொல்லப்படுகிறார்கள் என்றும், ஆயிரம் பேர்வரை பாலுறுப்பு மாற்று அறுவைச்சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு இறப்பைச் சந்திக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. மத்திய, மாநில அரசுகள் முறையான ஆய்வில் இறங்கினால் மேலும் அதிர்ச்சிகரமான பல விஷயங்கள் வெளியே வரும். இடையிலிங்க மனிதர்கள் பற்றிய விழிப்பு உணர்வு மக்களிடம் இல்லாத இந்தச் சூழலில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடம் எதிர்பார்ப்பது எப்படி நியாயமாக இருக்கும்?! 

திருநம்பிகள் சமூகம் எத்தகையது?

ஆணில் இருந்து பெண்ணாக மாறும் திருநங்கைகள் பற்றிய விழிப்பு உணர்வுகளும், விவாதங்களும் இருக்கும் அளவுக்கு, பெண்ணில் இருந்து ஆணாக மாறும் திருநம்பிகள் பற்றிய விவாதங்களும், விழிப்பு உணர்வுகளும் இங்கே இல்லை எனலாம். அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தற்போதுதான் சில தன்னார்வ அமைப்புகள் திருநம்பிகள் குறித்துப் பேசவும், அவர்களுக்காகச் செயல்படவும் ஆரம்பித்திருக்கிறார்கள். இது ஆரோக்கியமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. படைப்புலகத்தைப் பொறுத்தவரை திருநங்கை ரேவதி, ‘A Life In Trans Activism’ என்ற புத்தகத்தில் எட்டு திருநம்பிகள் பற்றியும் அவர்களின் வாழ்க்கை பற்றியும் எழுதினார் (தமிழில் இன்னும் படைப்புகள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது).  திருநம்பிகள் குறித்து பல்வேறு ஆய்வுகள் செய்து கட்டுரைகள் வெளியிட்டுவருபவரும், தமிழில் தன் வாழ்க்கையை (வெள்ளை மொழி) எழுதிய முதல் திருநங்கையுமான ரேவதியிடம் பேசினோம், ''ஒரு காலகட்டத்தில் திருநங்கைகள், திருநம்பிகளை ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். தற்போது அப்படி இல்லை. நிலை மாறியிருக்கிறது. திருநம்பிகள் என்றால் யார் என்று உணர்ந்திருக்கிறார்கள். மக்களுக்குத் தெளிவு ஏற்படாமல், திருநங்கைகள் சமூகத்தில் மட்டும் தெளிவு ஏற்பட்டால் போதுமா என்ற கேள்வி முக்கியமானது.

பொதுவாகவே ஒரு பெண், ஒரு பெண்ணின்மீது ஈர்ப்புகொண்டால் அவர்களை 'லெஸ்பியன்' என்று சொல்கிறார்கள். ஆனால், திருநம்பிகள் தங்களை முழுவதுமான ஆணாக மாற்றிக்கொண்ட பிறகுதான் ஒரு பெண்ணின்மீது ஆசைப்படுகிறார். இவர்களை எப்படி லெஸ்பியனாகக் கருத முடியும். இதுபோன்று பல்வேறு தளங்களில் விவாதிக்கப்பட்டு தற்போது ஒரு தெளிவான நிலைக்கு 'திருநம்பிகள்' கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள். இந்தச் சூழலில் மக்களுக்குப் போதுமான விழிப்பு உணர்வு வேண்டும் என்றுதான் நான் சொல்வேன். ஒரு திருநம்பி ஒரு பெண்ணுடன் வாழ ஆசைப்பட்டு அந்தப் பெண்ணை கூட்டிக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறுகிறார் என்று வைத்துக்கொள்வோம். இதனால் கோபம்கொள்ளும் பெற்றோர்கள், திருநம்பிக்கு எதிராகப் போலீஸில் புகார் தெரிவிக்கிறார்கள். தனது பெண்ணை மீட்க முடியாதபட்சத்தில் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்கிறார்கள். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள். நீதிமன்றம் இருவரையும் அவரவர் பெற்றோர்களுடன் செல்ல உத்தரவிடுகிறது. பிரிக்கப்படும் இருவருக்கும் கட்டாயத் திருமணம் உடனே நடத்திவைக்கப்படும். வேறு வழியின்றி கடைசிவரை தங்கள் ஆசையை மனதுக்குள் பூட்டிவைத்துக்கொண்டு காலம் கடத்திக்கொண்டிருப்பார்கள். பெரும்பாலும் இப்படித்தான் நடக்கிறது. இந்த நிலை மாற மத்திய அரசு கொண்டுவந்துள்ள மசோதா எந்தவிதத்தில் உதவும் என்று பார்த்தால் அதற்கான விடை கிடைக்கவில்லை. இது ஏமாற்றமான ஒன்றுதான். என்றாலும் திருநம்பிகளுக்குச் சட்ட அங்கீகாரம் கிடைக்கும் என்ற ஒரு விஷமே மகிழ்ச்சியைக் கொடுக்கிறது'' என்றார்.

ஒரு பெண், தனக்குள் இருக்கும் ஆண் தன்மையை, ஜீன்ஸ் பேன்ட், டீசர்ட் அணிந்துகொண்டும், ஆண்கள்போல ஹேர் ஸ்டைல் வைத்துக்கொண்டும் மட்டுமே வெளிப்படுத்த முடிகிறது. தன்னை ஒரு முழுமையான ஆணாக மாற்றிக்கொள்ள அவர்கள் சந்திக்கும் சவால்கள் ஏராளம். உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் அவர்கள் சந்திக்கும் போராட்டங்களும் ஏராளம். இதற்கான தீர்வு என்ன என்பது குறித்து மேலோட்டமாகக்கூட மசோதா பேசவில்லை. இந்தச் சூழலில்தான் தங்களுக்கென ஒரு மசோதா கொண்டுவாருங்கள் என்று கோரிக்கை வைக்கிறார்கள். 

மசோதா யாருக்கானது என்ற தெளிவற்ற விளக்கத்தை மட்டுமல்லாமல், இடையிலிங்க மனிதர்களை மசோதாவுக்குள் இணைத்து பெரும் குழப்பத்தை விளைவித்திருக்கும் மத்திய அரசு, வேறென்ன குழப்பங்களை மசோதாவுக்குள் நிகழ்த்திவைத்திருக்கிறது... அவற்றால் ஏற்படப்போகும் விளைவுகள் என்ன?

(தொடர்ந்து அலசுவோம்….)

திருநங்கையின் கேள்வியும்... மசோதா உருவான பின்னணியும் - மாற்றுப்பாலினத்தவர் உரிமையை மசோதா மீட்குமா? பகுதி 1


டிரெண்டிங் @ விகடன்