``லைஃப் ஜாக்கெட் 4 நாள் தாங்கும்... ஆனா, 8 நாளுக்குப் பிறகு..?’’ ஒகி புயலில் தத்தளித்த இளைஞர்களின் கதை | The untold story of Sri Ragini boat that carried fishermen who are graduates!

வெளியிடப்பட்ட நேரம்: 10:18 (21/12/2017)

கடைசி தொடர்பு:14:42 (22/12/2017)

``லைஃப் ஜாக்கெட் 4 நாள் தாங்கும்... ஆனா, 8 நாளுக்குப் பிறகு..?’’ ஒகி புயலில் தத்தளித்த இளைஞர்களின் கதை

பட்டதாரிகள் மட்டுமே நிரம்பிய கூட்டம் அது. ஒரு சிலர் இன்ஜினியரிங்கில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள், சிலர் வணிக நிர்வாகத்தில் முதுகலை (MBA) பட்டம் பெற்றவர்கள். 13 பேர், அதில் ஒருவர் மட்டுமே திருமணம் ஆனவர். நம் ஊரில் தான் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு நல்ல வேலை கிடைப்பதிலேயே. ஐ.டி. வேலைக்கோ, கால் சென்டர் வேலைக்கோ, மீடியா வேலைக்கோ செல்வதில் அர்த்தம் இல்லை என முடிவு செய்து, தங்கள் சொந்த ஊரிலேயே மீன்பிடி தொழில் செய்வோம் என்று ஒரு விசைப் படகை வாடகைக்கு எடுக்கிறார்கள். அதன் பெயர் ஸ்ரீ ராகினி. மிதமான வேகத்தில் செல்லும் அந்த விசைப்படகில் அதிக தூரம் எல்லாம் கடலில் போக முடியாது. நம்பிக்கையுடன் கிடைத்ததை வைத்து கடலில் இறங்கினர். இதையே தொழில் ஆக்கி வாழ்க்கையில் முன்னேறலாம் என்ற கனவுடன் தொழிலை தொடங்கினர். ஒருமுறை, இரண்டு முறை, கிடைத்த மீன்களுடன் வெற்றிகரமாகக் கரையேறினர். மூன்றாவது முறை கடலில் சென்ற ஸ்ரீ ராகினி படகு கரை திரும்பவே இல்லை. நம் பட்டதாரி மீனவர்களும் தான். ஒகி புயல் ஆடிய கோர தாண்டவம் அது!

ஒகி புயல் - படகு

Representational Image

இடம்: கன்னியாகுமரி! புயல் எல்லாம் அவ்வளவாகக் கண்டிராத மாவட்டம். அங்கே ஒகி என்னும் புயல் நவம்பர் 29ம் தேதி தாக்கியது. அடுத்த நாள் வரை அதன் வீரியம் கடலோர ஊர்களில் உணரப்பட்டது. அது ஊரையே புரட்டிப்போட்டது ஒருபுறம் இருக்கட்டும். கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்களின் எண்ணிக்கை மட்டும் ஆயிரத்தைத் தாண்டுகிறது என்கிறது மீனவர்கள் தரப்பு. அவர்கள் அனைவரும் என்ன ஆனார்கள்? செவ்வாயிலும், சந்திரனிலும் ஆராய்ச்சி நடத்தும் அளவிற்கு வளர்த்துவிட்ட அறிவியல் இதற்கு ஏன் உதவ மறுக்கிறது? சென்னையை வர்தா புயல் தாக்கியபோதும், மழை நீர் பெருக்கெடுத்த ஆறாக ஓடிய போதும், ஸ்டிக்கர் ஓட்டியேனும் நீண்ட இந்த மாநில அரசின் கரங்கள் எங்களுக்கு ஏன் நீளவில்லை என்பது தான் கன்னியாகுமரி மக்களின் கேள்வியாக இருக்கிறது. புயலுக்கு முன்னும், பின்னும், கன்னியாகுமரியில் என்ன நடந்தது என்று விவரிக்கிறார் தெற்கு ஆசிய மீனவர் தோழமை அமைப்பின் பொது செயலாளர் ஃபாதர் சர்ச்சில்.

ஃபாதர் சர்ச்சில்“நவம்பர் 29ம் தேதி மாலை 6 மணிக்கு, விரைவில் புயல் வரப்போகிறது என்ற அறிவிப்பு அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தகவல் வந்தது புயல் வருவதற்கு சில மணி நேரம் முன்பு. இவ்வளவு பெரிய ஆபத்தான விஷயத்தை அரசு மாலை வரை தாமதித்து தான் கூறியிருக்கிறது. அப்படியென்றால் பகல் 2 மணிக்கே கடலுக்கு மீன் பிடிக்க சென்றவர்களின் நிலைமை என்ன? 29ம் தேதிக்கு முன்னரே சென்ற கடலுக்கு சென்றவர்களின் நிலைமை என்ன? எங்கள் மீனவர்களில் பலர் விடியும் வரை கூட கடலில் இருந்து மீன்கள் பிடிக்கும் பழக்கம் கொண்டவர்கள். அதனால், அவர்கள் சில சமயம் சில 100  நாட்டிக்கல் மைல்கள் வரை கூட கடலில் செல்வார்கள். எப்படி நாங்கள் அவர்களுக்குத் தகவல் அளிப்போம்? கையிலிருக்கும் மொபைல் போன்களைக் கொண்டு கடலில் 20-30 நாட்டிக்கல் மைல்கள் வரை தொடர்பு கொள்ளலாம். வயர்லெஸ் கொண்டு 100 நாட்டிக்கல் மைல்கள் வரை போகலாம். புயல் அல்லது மழை என்றால் அதுவும் சிரமம் தான். அந்த வயர்லெஸ் வைத்துக் கூட எம்மீனவர்களுக்குத் தகவல் சொல்ல அரசு அதிகாரிகள் முன்வரவில்லை. அது உபயோகமில்லாத நிலையில் இருந்ததாகவே கூறப்படுகிறது.

புயலுக்கு முந்தைய நாள் வரை வந்த அறிவிப்புகளில் 40-50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றே கூறப்பட்டு வந்தது. கடலைப் பார்த்து வளர்ந்த எங்களுக்கு அந்த வேகம் ஒரு சாதாரண விஷயம் தான். ஆறு மணிக்குப் புயல் குறித்த அறிவிப்பு வருகிறது. இரவு 10.30 மணிக்கு நடுக்கடலில் புயல் தாக்குகிறது. அங்கே இருந்தவர்களுக்குத் தகவல் கிடைத்திருந்தால் கூட அவர்கள் கரையேறியிருக்க முடியாது. தமிழ்நாட்டின் கடைக்கோடியில் நீரோடி என்னும் கிராமம் இருக்கிறது, இங்கே மட்டும் 30க்கும் மேற்பட்ட மீனவர்கள் இறந்திருக்கிறார்கள்.

படகுகள்

ஸ்ரீ ராகினி படகில் என்ற சென்ற இளவயது மீனவர்களும் புயலில் மாட்டிக்கொண்டனர். அவர்கள் சென்ற படகில் ஒன்பது பேருக்கு ஏற்றவாறு லைஃப் ஜாக்கெட்கள் இருந்தன. புயலில் மாட்டினால் கூட நான்கு நாட்கள் அதை வைத்து அவர்கள் உயிர் வாழ்ந்திருப்பார்கள். ஆனால், இந்த அரசு, புயல் தாக்கி எட்டு நாட்கள் ஆன பின்னும் அவர்களைக் கண்டுபிடிக்க எந்த முயற்சியும் செய்யவில்லை. இத்தனைக்கும் புயல் தாக்கிய அன்றே இத்தனை மீனவர்கள் கடலில் இருப்பதாக நாங்கள் தகவல் கொடுத்துள்ளோம். எட்டாவது நாள் கூட கரையில் இருக்கும் மீனவர்கள் தான் கடலில் இறங்கித் தேடியிருக்கிறார்கள். 80 நாட்டிக்கல் மைல் தொலைவில் ஸ்ரீ ராகினி படகில் சென்றவர்களில் ஒருவரின் பிணத்தை மட்டும் பார்த்திருக்கிறார்கள். அதுவும் அழுகிய நிலையில், கரைக்கு எடுத்து வர முடியாத நிலையில் இருந்தது. அப்படியென்றால் அவர்கள் சென்ற படகு, 50 நாட்டிக்கல் மைலை அடைந்த போதே தாக்கப்பட்டிருக்க வேண்டும்.

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு என்ன பிரச்னையோ, அதே தான் கேரள முனையிலும். ஆனால், அங்கே புயல் தாக்கிய பின்பு நடந்ததே வேறு. இந்தியாவின் கடற்படை தானே அங்கேயும்? அங்கே அவர்கள் கடலில் இறங்கி நூற்றுக்கும் மேற்பட்ட சடலங்களை மீட்டுள்ளனர். கேரள மாநில அதிகாரிகள் கடற்கரையிலே தங்கி வேலை செய்தனர். மாட்டிக்கொண்ட மீனவர்கள் பலரை காப்பாற்றியுள்ளனர். இங்கே தமிழக அரசும் சரி, மத்திய அரசும் சரி பார்வையிடவே மெதுவாக ஒரு வாரம் கழித்து தானே வந்தனர்? கடலில் இறங்கி பிணங்களை தேடினால், இறப்பு எண்ணிக்கை அதிகரித்து விடும். தேசிய பேரிடர் மேலாண்மை என்ற ஒன்று ஏன் செயலடவில்லை எஎன்ற கேள்வி முன்வைக்கப்படும். இதற்காகத் தான் ஒரு உதவியும் செய்யாமல் இருந்தார்கள்.

மீனவர்கள் என்பவர்கள் ஒரு நாட்டின் சொத்து. எங்களால் வரும் பொருளாதார மேம்பாடு மட்டும் மத்திய அரசுக்கு வேண்டும், ஆனால், நாங்கள் வேண்டாமா? மாநில அரசு அறிவித்துள்ள சலுகைகள் மற்றும் உதவிகள் போதுமானதா? ஒரு மீனவன் கடலில் இறந்துவிட்டால், 7 வருடங்கள் கழித்து தான் அவன் இறந்துவிட்டதாகவே உறுதி செய்து சான்றிதழ் அளிக்கிறார்கள். அதன் பின்னர் தான் அரசு கொடுக்கும் உதவித் தொகையே அந்தக் குடும்பத்திற்கு செல்கிறது, அதுவரை, அந்தக் குடும்பத்தை யார் பார்த்து கொள்வார்கள்?

மீனவர்கள்

எங்கள் கோரிக்கைகள் அனைத்தையும் பலமுறை மாநில அரசிடமும், மத்திய அரசிடமும் வைத்து விட்டோம். கன்னியாகுமரியில் நிரந்தரமாக ஒரு மீட்பு குழு பணியமர்த்தப் பட வேண்டும். அவர்களுக்கு ஸ்பீட் போட்டுகள் கொடுக்கப்பட வேண்டும். ஹெலிகாப்டர் ஒன்றும் அதற்கான ஹெலிபேட் ஒன்றும் கரையில் அமைக்கப்பட வேண்டும். தரமான லைஃப் ஜாக்கெட்கள் வேண்டும். அரசு அளித்த லைஃப் ஜாக்கெட்களை கொண்டு கரைக்கு செல்லவே அச்சப்பட வேண்டியுள்ளது.

கேரளாவோடு கன்னியாகுமரியை இணைக்கச் சொல்லி நாங்கள் வேண்டுமென்றே போராடுவதாக, தேவையில்லாமல் போராடுவதாக பலர் கூறுகிறார்கள். 1956ம் ஆண்டு, இதே கன்னியாகுமரியை தமிழகத்தில் இணைக்கச் சொல்லி போராடியவர்கள் நாங்கள். எங்களையே ஏன் இப்படிப் பேச வைக்கிறார்கள் என்று சிந்திக்க வேண்டாமா?”

அவர் கேட்கும் சரமாரி கேள்விகளுக்கு நம்மிடம் பதில் இல்லை. மாநில அரசிடமும், மத்திய அரசிடமும் இருக்குமா என்பதும் தெரியவில்லை. ஸ்ரீ ராகினி படகு போல இன்னும் நூறு படகுகளின் கதைகள் புயலால் கடலுக்கு அடியில் புதைந்து விட்டன. இறக்கும் தருவாயில் அந்தப் பட்டதாரி மீனவர்களின் ஓலம் சென்னையில் இருக்கும் அரசுக்கு எப்படிக் கேட்டிருக்கும்? அவர்கள் காதை தான் ஆர்.கே.நகரின் இடைத்தேர்தல் பிரசார ஒலிபெருக்கிகளுக்குக் கொடுத்து விட்டார்களே? கன்னியாகுமரியில் ஃபாதர் சர்ச்சில் போன்றவர்கள் கூறும் விஷயம் ஒன்றே ஒன்று தான். அது மத்திய, மாநில அரசுகள் தமிழக மீனவச் சமுதாயத்தை ஒகி புயல் வருமுன்பும் காக்கவில்லை, வரும்பொழுதும் காக்கவில்லை,, வந்த பின்னும் காக்கவில்லை என்பதே!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close