ஒகி புயல் பாதிப்பு: ககன்தீப் சிங் பேடியிடம் ’கன்னியாகுமரி’ குழுவினர் நேரில் முறையீடு

ஓகி செயலரிடம் முறையீடு

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கான மறுவாழ்வுப் பணி, நிதியுதவிகளைச் செய்யுமாறு அரசுச் செயலாளர் ககன் தீப்சிங் பேடியிடம் கன்னியாகுமரி மறுகட்டுமானம் குழுவினர் இன்று நேரில் முறையிட்டனர். ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரி தேவசகாயம் தலைமையிலான இக்குழுவில், வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் தலைவர் தாமஸ் பிராங்கோ, கத்தோலிக்கப் பாதிரியார் சர்ச்சில், தமிழ் மையம் நிறுவனர் ஜெகத் கஸ்பர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். 

தலைமைச்செயலகத்தில் மீன்வளத் துறைச் செயலாளர் ககன் தீப் சிங்கை அக்குழுவினர் இன்று காலையில் சந்தித்தனர். அப்போது, மீனவர்களுக்கான இழப்பீடு மற்றும் நிதியுதவி தொடர்பாக ஏற்கெனவே அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஆழ்கடல் மீன்பிடிக்குச் செல்லும் அனைத்துப் படகுகளுக்கும் உயர் அதிர்வெண் கொண்ட கம்பியில்லா நடைபேசிகளை வழங்குவதில் அரசு உறுதியாக உள்ளது என்றும், கடலோரச் சமூகத்துக்காக அரசாங்கம் செயற்கைக்கோள் வானொலியைத் தொடங்கும் என்றும், கன்னியாகுமரியைத் தளமாகக் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு மையம் அமைக்க மாநில அரசு வலியுறுத்தும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தை வேளாண்மை உணவுப் பதப்படுத்தல் பகுதியாக மேம்படுத்த கொள்கை வகுக்கப்படும் என்றும் அரசு சார்பில் உறுதியளிக்கப்பட்டதாக சந்திப்பில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!