டெங்கு ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்ட பொதுமக்கள்! | Public take oath to eradicate dengue fever in Nellai district

வெளியிடப்பட்ட நேரம்: 22:50 (20/12/2017)

கடைசி தொடர்பு:07:44 (21/12/2017)

டெங்கு ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்ட பொதுமக்கள்!

டெங்கு ஒழிப்புப் பணிகளின் ஒரு பகுதியாக, நெல்லை மாவட்ட சுகாதாரத்துறையும் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பும் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், பொதுமக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

டெங்கு விழிப்பு உணர்வு

நெல்லை மாவட்டத்தில் டெங்கு ஒழிப்புப் பணிகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பல்வேறு இடங்களுக்கும் நேரில் சென்று டெங்குக் காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் உருவாகாமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளித்துவருகிறார். வீடுகள், வணிக நிறுவனங்கள், அரசு கட்டடங்கள் உள்ளிட்ட இடங்களில் கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்துடன், தனியார் அமைப்புகளின் மூலமாக விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் உள்ள பேட்டை பகுதியில் பொது சுகாதாரத்துறை மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆகியவை இணைந்து டெங்கு விழிப்பு உணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. ஆண்டுதோறும் வடகிழக்குப் பருவமழை பெய்து முடிந்ததும் கடையநல்லூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மர்மக் காய்ச்சல் பரவுவது வழக்கம். கடந்த ஆண்டு இந்தப் பகுதியில் டெங்குக் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு வகையான காய்ச்சல் பரவியதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். . 

அதனால், இந்த ஆண்டு காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் வகையில் சிறப்பு விழிப்பு உணர்வு கூட்டம் நடந்தது. கடையநல்லூர் பள்ளிவாசலில் நகராட்சி ஆணையர் அய்யூப்கான் தலைமையில் இந்த டெங்கு விழிப்பு உணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. மாவட்ட சுகாதார துறை துணை இயக்குநர் சோமசுந்தரம் மற்றும் பூச்சியியல் துறை தலைமை வல்லுநர் அப்துல்காதர், தவ்ஹீத் ஜமாஅத் மாவட்டத் தலைவர் முகம்மது பைசல், வட்டார மருத்துவ அலுவலர்கள் செய்யது சமீம் ஆயிஷா, விரைவு செயல்பாட்டு மருத்துவர்கள் ராஜ்குமார், மதுசூதனன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

விழிப்பு உணர்வுக் கூட்டம்

இந்த நிகழ்ச்சியில் பேசிய மருத்துவர்கள், டெங்குக் காய்ச்சலை உருவாக்கும் கொசுக்கள் உருவாகும் சூழல் குறித்தும் அவை முட்டையிட்டு பெருகுவது பற்றியும் விரிவாகவும் விளக்கமாகவும் பேசினார்கள். கொசுக்களைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்க வேண்டிய அவசியம் ஆகியவை பற்றியும் விளக்கிக் கூறினார்கள். பொதுமக்களும் தங்களுடைய சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெற்றார்கள். இந்த நிகழ்ச்சியில் கடையநல்லூர் நகராட்சி சுகாதார அலுவலர் சீனிவாசன், மற்றும் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளான அப்துல்காதர், குறிச்சி சுலைமான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.