வாட்ஸ் அப்பால் சிக்கிக்கொண்ட சப்-இன்ஸ்பெக்டர்கள்!

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி காவல் நிலையத்தில் பணியாற்றிவந்த எஸ்.ஐ., ராமதாஸ், எஸ்.ஐ. உதயகுமார், காவலர் பாலாஜி ஆகிய மூவரையும், கடந்த வாரம் கிருஷ்ணகிரி ஆயுதப்படை பிரிவுக்கு ஒரே நேரத்தில் மாற்றம் செய்தது, கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸாரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. என்னவென்று விசாரித்தபோது கிடைத்த சுவாரஸ்யம்.

சம்பவம் 1 - இது தொடர்பாக போலீஸாரிடம் விசாரித்தபோது, பா.ம.க பிரமுகர் ஒருவர், வெளியூரியிலிருந்து வரும் தனது மனைவியை அழைத்துச்செல்ல பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தவரை ஏன் இங்க நிக்குற, கிளம்பு என்று மிரட்டலாகப் பேசிய எஸ்.ஐ., ராமதாஸ், ஒருகட்டத்தில் ஆபாசமாகப் பேசியுள்ளார். சம்பவத்தை அப்படியே எஸ்.பி-க்கு ஆடியோ ரிக்கார்டாக அனுப்பி, இதுதான் காவல்துறையின் லட்சணமா என்று பா.ம.க கட்சி சார்பில் புகார் அளிக்க, பிரச்னை வேண்டாம் என்று பேசிய எஸ்.பி., எஸ்.ஐ., ராமதாசை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் 2 - வேலூரிலிருந்து பெங்களூரூ சென்ற கலைசெல்வன், தனது புதிய காரில் பயணம்செய்துள்ளார். சூளகிரியில் அடுத்தடுத்து நான்கு கார்கள் மோதிக்கொண்டதால், சிறு சேதம் ஏற்பட்டது. சம்பவத்தில் இரண்டு மூன்றாவது கார் உரிமையாளர்களிடம் ரூ.5 ஆயிரம் வசூல் செய்துகொண்ட எஸ்.ஐ உதயகுமார், முதலாவது கார் உரிமையாளர் கலைச்செல்வனிடம், 'ரூ.10 ஆயிரம் கொடு, இல்லையென்றால் சிஎஸ்ஆர் கொடுக்க முடியாது; வழக்குப்பதிவு செய்யவும் முடியாது' என்று மிரட்டவும், கலைச்செல்வன் தனக்குத் தெரிந்த உயர் அதிகாரிக்கு வாட்ஸ் அப்-பில் வாய்ஸ் ரிக்கார்டை அனுப்பிவைத்துவிட்டார். தகவல் எஸ்.பி., மகேஷ்குமாருக்கு வரவும் பதறிப்போய், கலைச்செல்வனை அனுப்பிவைத்துவிட்டு, ஆயுதப்படைக்கு எஸ்.ஐ., உதயகுமாரை மாற்றியுள்ளார்.

சம்பவம் 3 - டாஸ்மார்க்கில் குடித்துவிட்டு வந்த குடிமகன்களிடம் காவலர் சம்பத் பணம் கேட்டு பிரச்னை செய்ததுடன், பாக்கெட்டில் கைவிட்டு பணம் எடுத்துள்ளார். ஆத்திரம் அடைந்த குடிமகன்கள், சம்பத்தைப் புரட்டி எடுத்துள்ளனர். சம்பவம் வெளியே தெரிந்தால் அசிங்கம் என்று சம்பத்தை ஆயுதப்படைக்கு மாற்றிவிட்டதாக, விவரத்தை விளக்குகின்றனர் போலீஸார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!