வெளியிடப்பட்ட நேரம்: 12:10 (21/12/2017)

கடைசி தொடர்பு:12:10 (21/12/2017)

குப்பைக்கிடங்காக மாறிய 75 ஏக்கர் பாசனம் பெறும் கண்மாய்! ஊராட்சி ஆணையர்மீது பகீர் புகார்

சிவகங்கை மாவட்டம், காளையார்கோயில் ஊராட்சிக்குட்பட்ட ஒளிகுளம் கண்மாயில் குப்பைகளைக் கொட்டும் ஊராட்சித் தனி அலுவலரான ஆணையாளர்மீது, காளையார்கோயில் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் திருநாவுக்கரசு புகார்செய்துள்ளார்.

அந்தப் புகாரில், 'காளையார்கோயில் ஊராட்சி, பேரூராட்சியாகத் தரம் உயர்த்தவேண்டிய ஊராகும். வெள்ளைக்காரர்களை எதிர்த்து போராட்டத்தில் பங்காற்றிய ஊர், காளையார்கோயில். சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்டு, எந்த முன்னேற்றமும் காணாத ஊராட்சி.  இங்கு, பல்வேறு முறைகேடுகள் சத்தமில்லாமல் நடந்துகொண்டிருக்கின்றன. இங்கு, உள்ளாட்சி சட்டவிரோத நிகழ்வும், உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி குப்பைகளைக் கண்மாயில் கொட்டும் சட்டவிரோதமும் நடந்துகொண்டிருக்கிறது.

காளையார்கோயிலில் ஒளிகுளம் கண்மாய் உள்ளது. இக்கண்மாய், 75 ஏக்கர் பாசனவசதி பெறும். இதில், காளையார்கோயில் ஊராட்சியின் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால், இந்தப் பகுதி சுகாதாரக்கேடடைந்துள்ளது. ஊராட்சி நிர்வாகத்தினர், இரட்டைவேடம் போடுகிறார்கள். அதாவது, ஒளிகுளம் கண்மாயில் கழிவுநீர், கோழிக்கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டுவது உள்ளாட்சி சட்டம் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் உட்பிரிவு 110 இ (242)(1)-ன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்; அபராதம் விதிக்கப்படும்; காவல்துறைமூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கைசெய்து ஊராட்சி தனி அலுவலர் தகவல் பலகை வைத்துள்ளார். ஊராட்சி நிர்வாகத்தினரே அந்த சட்டத்தை மீறி குப்பைகளைக் கொட்டுகிறார்கள். இந்தச் செயல் சட்டவிரோதமாகும். நீர்நிலைகளை மாசுபடுத்துவது உச்ச நீதிமன்ற உத்தரவை மீறிய செயலாகும். இந்த சட்டவிரோதச் செயலுக்குக் காரணமான ஊராட்சி ஒன்றியத் தனிஅலுவலரும் ஆணையாளரும்தான் காரணம். ஆணையாளர்மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். உடன் ஒளிகுளம் கண்மாயைச் சுத்தம் செய்ய வேண்டும்'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க